Monday, October 7, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Kalaivani Saravanan

1.4.2023 – சனி காமதா ஏகாதசி

சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது. சிலர் இன்றும் (1.4.2023), சிலர் நாளையும் (2.4.2023) அனுஷ்டிக்கின்றனர். தசமி ஒரு நாழிகை, இருப்பினும் வைஷ்ணவர்கள் அனுசரிப்பதில்லை. ஆகையினால் அவர்கள் ஞாயிறு ஏகாதசி அனுஷ்டிக்கிறார்கள். ஆயில்யம் (1.4.2023) மற்றும் மகம் (2.4.2023) நட்சத்திரத்தில் வரும் இந்த ஏகாதசி. காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்று கின்ற ஏகாதசி. இந்த ஏகாதசி பலனை புரிந்து கொள்வதற்கு ஒரு கதை உண்டு. நாக உலகத்தில் நடந்த கதை.

லலிதன் என்ற கந்தர்வனும் லலிதா என்கின்ற அப்சரஸ் பெண்ணும் இணைந்து வாழ்ந்து வந்தனர். லலிதன், கந்தர்வ கானத்தில் சிறந்தவன். அவன் நாகராஜனான சபைக்குச் சென்று பாடினான். அவருடைய பாட்டு அற்புதமாக இருந்தது. ஆனால், திடீரென்று அவனுடைய எண்ணம் தன் மனைவியான லலிதாவின் மீது செல்லும் பொழுது, கவனக்குறைவாக பாட்டில் ஸ்வரம் பிசகி, தாளம் தட்டியது. புண்டரீகன், உடனடியாக மிகுந்த கோபம் கொண்டு ‘‘நீ காம பரவசனாகி, சங்கீதத்தை அவமதித்துவிட்டாய். எனவே நீ அரக்கனாக போகவேண்டும்” என்று சபித்துவிட்டான். உடனே லலிதனுக்கு அரக்க உருவம் உண்டாகிவிட்டது. அவருடைய வாய் மிகவும் மோசமான முறையில் கோர வடிவம் கொண்டதாக ஆகிவிட்டது. மிகுந்த துயரத்தை அடைந்தான்.

இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட லலிதா ஓடிவந்தாள். தன் கணவனுக்கு நேர்ந்த சோதனையைக் கேட்டு வருந்தினாள். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை முனிவர்களிடம் கேட்கலாம் என்று காட்டுக்குச் சென்றாள். அங்கே, சிருங்கி முனிவரைப் பார்த்து நடந்த செய்திகளைச் சொல்லி, இதற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று கேட்க, அந்த முனிவர் சொன்னார்; ‘‘சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்து முறையாக எம்பெருமானைப் பாடி, துவாதசியில் அந்தணர்களை அழைத்து தானம் செய்து, அவர்கள் முன்னிலையில் ஏகாதசி பலனை உன் கணவனுக்கு பிராயச் சித்தமாக தத்தம் செய்து கொடுத்தால், அவன் பழைய உருவத்தில் மீண்டு வருவான்” என்று சொல்ல, அப்படியே அவள் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தாள்.

ஏகாதசி விரதம் ஆரம்பித்து, ஏகாதசி முழுக்க எதுவும் உண்ணாமல், எம்பெருமானை நினைத்து, அவருடைய மந்திரங்களை ஜபம் செய்துகொண்டிருந்தாள். இரவெல்லாம் கண்விழித்து எம்பெருமானைப் பாடினாள். மறுநாள் அந்தணர்களை அழைத்து ஏகாதசி உபவாசத்தின் பலனை கணவரின் “சாப நிவர்த்திக்காக அர்ப்பணம் செய்கிறேன்” என்று சங்கல்பம் செய்து அர்ப்பணித்தாள் அடுத்த நிமிடம், கணவனுடைய கோர அரக்க உருவம் நீங்கி பேரழகனாக மாறினான். ஒரு தங்க விமானம் வர, அதில் ஏறிக்கொண்டு அவர்கள் மகிழ்வுடன் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். எந்த தோஷத்தையும் நீக்கி மங்கலங்களை செய்யக்கூடியது இந்த காமதா ஏகாதசி என்பது இதில் இருந்து தெரிகிறது.

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்-
மனக்கடலில் வாழவல்ல மாயமணாளநம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே என்றென்று
உனக்கிடமாய்யிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே.

என்ற பாசுரத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

3.4.2023 – திங்கள்
சோம மகா பிரதோஷம்

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம். மனிதர்களின் தோஷங்களையும் – (குற்றங்களை) பாவங்களையும் நீக்குவதால், இந்த வழிபாடு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவாலயங்களில் இன்று சோம வார பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷமும், சோமவார பிரதோஷமும் சிறப்பு வாய்ந்தது. சந்திரனுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு. பிறை சூடிய பெருமான் அவன். சந்திர சூடன், சந்திரசேகரன் என்ற திருநாமங் களோடு இருப்பவன். சோமவாரம் எனப் படும் திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிகுந்த நற்பலன்களைத் தரும். அதுவும், அன்று பிரதோஷம் வந்து, பிரதோஷ காலத்தில் சிவன்கோயிலில் வழிபாடும் செய்தல், பல்கோடி புண்ணியத்தை தரும்.

குறிப்பாக, ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷ நாளில் சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால், உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் மாறும். அறிவு தெளிவாகும். மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில் அபிஷேகப்பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.

பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்ககுரல்வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும், சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

3.4.2023 – திங்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் உலா (மறுநாள் மயிலாப்பூரில் திருவிழா)

காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பான பங்குனி உத்திர பெருவிழா 13 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேவை, தங்க ரிஷப வாகனவீதி உலா முதலியவை இங்கு விசேஷம். லட்சக் கணக்கான மக்கள் கூடும் இத்திருவிழாவில் இன்றைய தினம், ஏகாம்பரேஸ் வரர் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியும், இரவு அறுவத்திமூவர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.

4.4.2023 – செவ்வாய்
திருவாலியில் திருவேடுபரி பிரம்மோற்சவம்

சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும், ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீகல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 28-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா நடக்கும். மூன்றாம் தேதி திங்கட்கிழமை சூர்ண உற்சவம் நடைபெறும். மாலை பெருமாளும் ஆழ்வாரும் மங்கலகிரியில் புறப்படுவார்கள். நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை பிற் பகலில் திருவாலியில் (சீர்காழிக்கு அருகில் பூம்புகார் போகும் வழியில்) ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும். அதற்குப் பிறகு வேதராஜபுரம் என்னும் இடத்தில் இரவு 12 மணிக்கு திருவேடுபரி உற்சவம் நடைபெறும்.

லட்சக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்துக்கு கூடுவார்கள். திருமங்கையாழ்வாருக்கு ஞானம் கிடைத்த உற்சவமாக இந்த உற்சவத்தைக் கருதுகிறார்கள். இதற்கு முன்னால் திருவாலி தேசத்தின் அரசராக இருந்தவர். திருவேடுபரி உற்சவத்தின் முடிவில் பெருமாளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று ஆழ்வாராகி தம் முடைய பெரிய திருமொழியைத் தொடங்கிய நாள் இந்த நாள். மேலும், 5.4.2023 புதன்கிழமை அன்று தீர்த்தவாரி திருமஞ்சனம் சாற்றுமுறை நடந்து, இந்த உற்சவம் பூர்த்தி ஆகிறது.

இதே நாளில் ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர வைபவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று பெரிய பிராட்டி ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் எனும் சேர்த்தி உற்சவம் நடைபெறும். இந்த நாளில்தான் ஸ்ரீராமானுஜர் சரணாகதி கத்யம் பாடி உலக மக்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக பெருமாளிடம் சரண் புகுந்தார்.

5.4.2023 – புதன்
பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் குருவுக்கு உரியது. உத்தர நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. பங்குனி மாதத்தில் சூரியனும் குருவும் இந்த ஆண்டு மீனராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தினத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 12-வது ராசியான பங்குனி மாதமும் 12-வது நட்சத்திரமான உத்தர நட்சத்திரமும் சேரும் இந்த நல்ல நாளில், முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து விழாக்களைக் கொண் டாடும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. இந்த நல்ல நாளில் முருகனுக்கு தேர் இழுப்பார்கள். அபிஷேகம் செய்வார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

திருமால் ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. பங்குனி உத்திரம் கொண்டாடுவதில் இரண்டு வழிமுறைகள் ஆலயங்களில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உத்தர நட்சத்திரம் துவங்கிவிடுவதால், அன்று சில இடங்களில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. ஆனால், சில ஆலயங்களில் உத்தரம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்த தினம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

(5.4.2023) தெய்வத் திருமணங்களுக்கு மிக முக்கியமான இந்த நாளில் பார்வதி பரமேஸ்வரர் திருமணமும், சீதா கல்யாணமும், முருகன் தெய்வானை திருமணமும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர விரதத்தால் தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறும். எல்லாச் செல்வங்களும் வாழ்வில் சேரும். முருகன் தெய்வானையை மணந்த நாளான பங்குனி உத்தரத்தன்று முருக பக்தர்கள் திருமண விரதம் இருப்பார்கள். இதன் மூலம் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத தடைகள் விலகும். கோயில்களில் திருக்கல்யாண உற்சவங்களை இன்றைய தினம் தரிசிக்க வேண்டும். வெயில் காலம் தொடங்கிவிட்டதால் பங்குனி உத்திர நன்னாளன்று தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்குவது மிகச்சிறந்த தர்ம காரியம் ஆகும்.

6.4.2023 – வியாழன்
திருவரங்கத்தமுதனார்
அவதார நட்சத்திரம்

திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர். புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல். திருவரங்கத்தின் கோயில் சாவி அவரிடம்தான் இருந்தது. அவர் ஸ்ரீராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார்.

அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஓதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுத னாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம். அதாவது இன்று. திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi