இந்த வார விசேஷங்கள்

மகா சங்கட ஹர சதுர்த்தி 3.9.2023 – ஞாயிறு

சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இன்று (03.09.2023) மாலை வரை சனியின் உத்திரட்டாதி நட்ஷத்திரம். பிறகு புதனுக்குரிய ரேவதி.இன்று விரதமிருந்து விநாயகர் வழிபாடு நடத்த சகல வினைகளும் போகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். புருகண்டி முனிவர் சங்கட ஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றார் கிருத வீரியன் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.

அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்துவிட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அறுகம்புல் அல்லது வாசனை மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்யவும். மாலை வரை உபவாசம் இருந்து மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். இன்று சொல்ல வேண்டிய பாடல்.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!

சூரிய பூஜை 3.9.2023 – ஞாயிறு

ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்தவுடன் பல் துலக்கி, கிழக்கே நின்று சூரியனை வணங்க வேண்டும். மாலை மேற்கே நின்று வழிபட வேண்டும். காலை சந்தி, உச்சிக்காலம், மாலை சந்தி நேரம் ஆகிய நேரங்களில் வழிபாடு செய்வதை சந்தியாவந்தனம் என்று சொல்வார்கள். குறைந்தபட்சம் காலை வேளை சூரிய நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையும் செய்ய முடியாதவர்கள் ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசியம் செய்ய வேண்டும். காரணம் ஆவணி மாதம் சூரியன் தனது சொந்த ராசியில் முழுமையான ஆட்சி பலத்தோடு இருப்பார்.

சில குடும்பங்களில் ஆவணி மாதம் ஞாயிறு காலை வீட்டுமுற்றத்தில் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பது உண்டு. இந்த சூரிய வழிபாட்டினால் ஆத்ம ஞானம் வளரும். உற்சாகம் சிறக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். கண்கள் ஒளி பெறும். சூரியனை வழிபடும் பொழுது ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யலாம்.

‘‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே,
பாச ஹஸ்தாய தீமஹி,
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்’’

எனும் சூரிய காயத்ரி சொல்லலாம். அப்படி இல்லாவிட்டால், கீழே உள்ள பாடலையாவது சொல்லி வழிபடலாம்.

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோயில் குடமுழுக்கு 3.9.2023 – ஞாயிறு

‘‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’’ என்பார்கள். மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோயில். இந்தத் திருக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. இங்கே மயூரநாதர் அருட்காட்சி தருகிறார். அம்பாள் அபயாம்பிகை என்ற திருநாமத்தில் அருள்கின்றாள். காவேரி கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்களில் இந்தத் தலம் முக்கியமானது. காசிக்கு இணையாகக் கருதப்படுவது.

பார்வதி தேவி தன்னுடைய தந்தை தட்சனின் யாகத்தில் கணவனின் அனுமதி இல்லாமல் கலந்து கொண்டாள். அதனால் பார்வதி தேவி வினைத் துன்பத்துக்கு ஆளானாள். இறைவனை பிரியும்படி நேர்ந்தது. தன்னுடைய குற்றம் நீங்க, காவேரிக் கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்கள் தவம் செய்து வந்தாள். அப்படி தவம் செய்வதற்காக தன்னுடைய உருவத்தை மயில் வடிவமாக எடுத்துக்கொண்டாள். பார்வதி மயில் ரூபத்தில் தவம் செய்வதை அறிந்த சிவபெருமான் தானும் ஆண் மயில் உருவெடுத்து பார்வதியைச் சந்தித்து சாப விமோசனம் தந்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

சிவனும் பார்வதியும் மயில் உருவத்துடன் இங்கு ஆடியதால் மயில், ஆடு, காவேரி துறை என்று இத்தலம் பெயர் பெற்றது. சுருக்கமாக மயிலாடுதுறை என்ற பெயர் அமைந்தது.இந்தத் திருக்கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நடைபெறும் என திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்திருக்கிறார்.

திருச்செந்தூர் ஆவணி விழா 4.9.2023 – திங்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். திருச்செந்தூரில் முருகன்தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். குமரவிடங்கப் பெருமான் சண்முகரின் உற்சவர். அலைவாயகந்தப் பெருமான் ஜெயந்திநாதரின் உற்சவர். இந்த நான்கு உற்சவர்களுக்குமே கோயிலில் தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. வங்கக்கடலோரம் 2-ஆம் படை வீடான அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா வெகு சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டின் விழா இன்று (4.9.2023) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 10.09.2023 அன்று சிவப்பு சாத்தி உற்சவமும், (சுவாமி தங்க சப்பரத் தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.) 11.09.2023 அன்று பச்சை சாத்தி உற்சவமும் (பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா) நடைபெறும். 13.09.2023 அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும்.

சஷ்டி 5.9.2023 – செவ்வாய்

முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். இன்று ஆவணி மாத சஷ்டி என்பது சிறப்பு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சம். சஷ்டியிலிருந்தால் அகப் பையில்” வரும் என்று கூறுவார்கள். அதாவது இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் “அகப்பையாகிய” “கருப்பையில்” குழந்தை உருவாகும்.

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!