திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா இன்றுமாலை நடைபெறுகிறது. இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளதால், கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் திருவிழாக்களில் திருவூடல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் ஏற்பட்ட ஊடலையும், சுந்தரமூர்த்தி நாயனார் தூது விடுதலும், பின்னர் ஊடல் தணிந்து மறுவூடல் நடைபெறுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. புராணத்தில் பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டேன் என்ற பிடிவாதம் கொண்டவர். ஒருமுறை அவர், கயிலை மலைக்கு சென்றார்.

சிவபெருமானும், பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் அருகருகே அமர்த்திருந்தனர். இதனால் பிருங்கி முனிவர் வண்டாக உருவெடுத்து சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இடையே புகுந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்டார். இதனால் கோபம் அடைந்த பார்வதிதேவி, ‘என்னை வழிபடாத உன்னுடைய சக்தி அகலட்டும்’ என சபித்தார். இதனால் சக்தியை இழந்து கீழே விழப்போன பிருங்கி முனிவரை, சிவபெருமான் தாங்கி பிடித்தார். இதனால் சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் ஊடல் உண்டானது. இதனால் பார்வதிதேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து கதவை பூட்டிக்கொண்டார். இவர்களது ஊடலை தணிக்க சுந்தரமூர்த்திநாயனார் தூது செல்கிறார். ஆனால் தூது வெற்றிபெறவில்லை. இதனால் சிவபெருமான் மறுநாள் பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்துவிட்டு, கோயிலுக்கு சென்று பார்வதிதேவியின் கோபத்தை தணித்தார்.

இதனால் அவர்களது ஊடல் தணிந்து மறுவூடல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுபொங்கலன்று நடைபெறும். அதன்படி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகளான அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சுந்தமூர்த்தி நாயனார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு மற்றும் பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நந்திக்கும், ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசல் வழியாக சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சியளித்தார். மாடவீதியில் 3 முறை பவனி வந்து அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது ஏராளமான பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாரை வழிபட்டனர். இன்று மாலை 6 மணியளவில், தெற்கு மாடவீதியான திருவூடல் வீதியில் திருவூடல் விழா நடைபெறுகிறது. அப்போது அண்ணாமலையாரிடம், உண்ணாமுலையம்மன் கோபம் கொள்வதுபோல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் உண்ணாமுலையம்மன் கோபத்துடன் தனியாக கோயிலுக்கு சென்று தனது சன்னதியின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். இதைதொடர்ந்து அவரை, சமரசம் செய்ய சுந்தரமூர்த்தி நாயனார் தூது செல்வார். ஆனால் உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் குமரன் கோயிலுக்கு சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும். நாளை அண்ணாமலையார் கிரிவலம் புறப்பட்டு செல்வார். தொடர்ந்து பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்துவிட்டு, நாளை மாலை கோயிலுக்கு செல்வார்.

அங்கு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை சமரசம் செய்யும் மறுவூடல் விழா நடைபெறும். அப்போது உண்ணாமுலையம்மன் கோபம் தணிந்து, சன்னதி கதவை திறந்து அண்ணாமலையாருடன் ஒன்றாக சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். திருவூடல் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ேகாயிலில் கூட்டம் இன்று அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு