திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு திடீரென தீப்பற்றிய கார் பெண், டிரைவர் தப்பினர்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் கிளைச்சிறை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரிலிருந்த பெண் உட்பட இருவர் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (55). இவர், சிவராத்திரியையொட்டி தனது உறவினர்களுடன் நாகர்கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வாடகை காரில் சென்றார். அங்கு தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்துகொண்டிருந்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே சிலர் இறங்கி விட்டனர். இதனால் காரில் கிருஷ்ணவேணி, டிரைவர் ரங்கராஜ் மட்டும் இருந்தனர்.

திருவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை அருகே நள்ளிரவு வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து டிரைவர் ரங்கராஜ், கிருஷ்ணவேணி இருவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய துவங்கியது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி முத்து செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணமும் எரிந்துவிட்டதாக கிருஷ்ணவேணி தெரிவித்தார். காரில் இருந்த இருவரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தால் கிளைச் சிறைச்சாலை பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!