திருவாரூர் தொழிலதிபர் கொலை வழக்கு முறையான விசாரணை நடத்தாத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தஞ்சை சரக டிஐஜி அதிரடி

திருவாரூர்: திருவாரூர் தொழிலதிபர் கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தாத பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். திருவாரூர் தாலுகா, சோழங்கநல்லூரை சேர்ந்த தொழிலதிபர் பாபு (48). திமுக பிரமுகரான இவர், காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து கரித்தூள் எடுத்து செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கி வந்தார். திருமண மண்டபமும் நடத்தி வந்தார்.

தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த கணேசன் என்பவரும் இந்த தனியார் துறைமுகத்தில் கரித்தூள் எடுத்து செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை இயக்கி வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டி தகராறில் பாபுவை கொலை செய்து விடுவதாக கணேசன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவை பாபு அனுப்பினார். அதன்பேரில் வைப்பூர் காவல் நிலைய (பொ) இன்ஸ்பெக்டரான திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தினார்.

ஆனால் விசாரணைக்கு பாபு ஒத்துழைக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் கடந்த 9ம்தேதி தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகனுடன் சென்ற பாபுவை தஞ்சாவூர் ஞானம் நகர் அருகே 2 பேர் கும்பல் வெட்டி கொன்றது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும் விசாரணையை முழுமையாக நடத்தாத வைப்பூர் (பொ) இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்றுமுன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.

Related posts

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு