திருவாரூர் அருகே தண்டவாளத்தில் தூங்கிய மாணவர், தொழிலாளி ரயில் ஏறி பலி: மேலும் ஒரு மாணவர் சீரியஸ்

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே உப்பூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்று விட்டு தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது ரயில் ஏறியதில் பள்ளி மாணவன் உட்பட 2 பேர் தலை துண்டித்து பலியாகினர். மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வந்தது. 10ம் நாள் விழாவாக நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது சுவாமி வீதியுலாவில் உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண்(17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார்(17), நாகை மாவட்டம் மேலமருதூர் தெற்கு பிடாரியை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன்(24) ஆகியோர் பங்கேற்றனர்.

சுவாமி வீதியுலாவில் பங்கேற்று சோர்வடைந்ததால் 3 பேரும் நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 3 பேர் மீதும் ஏறியது. இதில் அருண், முருகபாண்டியன் ஆகியோர் தலை துண்டாகி பரிதாபமாக பலியாயினர். மேலும் பரத்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், திருவாரூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த பரத்குமாரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அருண் மற்றும் படுகாயமடைந்த பரத்குமார் ஆகியோர் தாணிகோட்டத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்ததும், பலியான முருகபாண்டியன், மைக்செட் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கோயில் திருவிழாவின்போது நடந்த துயர சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை