திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு: மாணவர்களுக்கு 2ம் பருவ பாடபுத்தகம் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது நாளாக ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகம் மற்றும் விலையில்லா கல்வி உபகரணங்களை இன்று வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளான இன்று மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று இரவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் பள்ளி மற்றும் விடுதியில் தேவையான வசதிகள் இருக்கிறதா என கேட்டறிந்தார். மேலும், விடுதியை பராமரிக்கும் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என விசாரித்தார்.

இந்நிலையில் 2வது நாளாக இன்று செங்கம் அடுத்த சே.அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கினார். பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதா என பார்வையிட்டார்.

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஆகியவை தூய்மையாக தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் அடுத்த மேல்வன்னியூரில் உள்ள அரசு பள்ளியிலும் அமைச்சர் அன்பில்மகேஷ் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கிய காலை சிற்றுண்டிய ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளின் வாசிப்புத்திறனையும் ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.

Related posts

நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவு: 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவிப்பு!!

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு