திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்..!!

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் வேங்கிக்கால் ஊராட்சியில் குப்பைகள் மலைபோல தேங்கியுள்ளன. நகராட்சி கிடங்கில் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள வேங்கிக்கால் ஊராட்சியில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நீதிமன்ற கட்டடங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த ஊராட்சியை திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட நகர்களில் சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் வேங்கிக்கால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன.

ஒவ்வொரு வீதியிலும் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் பல தரப்பட்ட குப்பைகள் நிரம்பி வழிந்தும் சாலையோரங்களில் குவிந்து கிடைக்கும் குப்பைகளில் இருந்தும் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். குடியிருப்புகள் கிரிவலப்பாதை நெடுஞ்சாலைகள் என திரும்பிய திசையெல்லாம் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. அரசு உயர்அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் பயணிக்கும் பாதைகளில் குவிந்து கிடைக்கும் குப்பைகளை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி தெரிவித்துள்ள குடியிருப்பு வாசிகள் வேங்கிக்கால் ஊராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனி இடம் ஒதுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி