திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு

*கூடைப்பந்து விளையாடி கலெக்டர் அசத்தல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து 15 நாட்களாக நடந்தது. அதில், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தடகளம், நீச்சல், செஸ், கேரம், கிரிக்கெட், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், கபாடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் நிறைவு நாளான நேற்று கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,625 மாணவிகள் ஆர்வமுடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 100 மீட்டர் ஓட்டம், வாலிபால், டேபிள் டென்னிஸ், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தங்கள் திறமையை மாணவிகள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூடைப்பந்து விளையாட்டில் கலந்து கொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது.

எனவே, விளையாட்டில் தங்கள் திறமையை மேம்படுத்தி அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆலோசனை வழங்கினார். மேலும், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீசில் புகார்

அமெரிக்காவில் பயணிகளுடன் பேருந்து கடத்தல்..!!

தபேதார் மாற்றத்திற்கு லிப்ஸ்டிக் காரணமல்ல : மேயர் அலுவலகம்