திருவள்ளூர் நகராட்சி கண்ணதாசன் நகரில் இணைப்பு சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆணையர் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் ஜூலை 19: திருவள்ளூர் நகராட்சி, கண்ணதாசன் நகர், காமாட்சி அவென்யூ பகுதியில் இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பூங்கா ஆக்கிரமிப்புகள், கோயில் நில ஆக்கிரமிப்புகள், சாலை ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் மீட்டு வருகின்றனர். வீட்டுமனை பிரிவு அமைப்பவர்கள் அரசு விதிமுறைப்படி பூங்காவிற்காக நிலத்தை ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் அதனை முறையாக அமைக்காமல் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தையும் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்து விடுகின்றனர். அது காலப்போக்கில் வீட்டு மனை ஆகவே மாறி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் நகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.எம்.நகர், 13வது வார்டுக்கு உட்பட்ட ஏ.எஸ்.பி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரனால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி, கண்ணதாசன் நகர், காமாட்சி அவென்யூ பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் விஜயா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர், ஷெட், குளியலறை மற்றும் பின்பக்க சுற்றுச்சுவர் ஆகியவற்றை இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதாக நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

 

Related posts

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்

ஒட்டன்சத்திரம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து