திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2,000 ஆண்டுகள் பழமையான பிறவி மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது பிறவி நோய் தீர்க்கும் மற்றும் அஸ்வினி நட்சத்திர பரிகார கோயிலாகும். தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லாலான கஜசம்ஹார மூர்த்தி சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வர். இந்த கோயில் கும்பாபிஷேக விழா துவங்கி கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம், கட்டக்கோபுரம், மூலவர் விமானம், அம்பாள் விமானம், அம்பாள் ராஜகோபுரம், வேதாரண்யேஸ்வரர், தியாகராஜர் விமானம் உள்ளிட்ட 27 கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் எம்எல்ஏ மாரிமுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் முருகையன், திமுக நகர செயலாளர் பாண்டியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். எஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி வெள்ளதுரை, டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்