திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மாற்றுப் பாதை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (03.05.2023) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையானது, தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரியும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, இன்று (03.05.2023) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் (Master Plan) முன்னேற்றம் குறித்தும், இராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் சி.இசையரசன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், வேலூர் மண்டல இணை ஆணையர் சி.லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் கோ.ராம் மோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்வத்பேகம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் எ.எஸ்.விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் கே.அன்பரசு, திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் பி.விஜயா, வனச்சரக அலுவலர் அருள்நாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவாரூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!!

மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்