திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தேவையான நீரை சேமிக்க பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவுக்கு தண்ணீர் திறப்பு

*வினாடிக்கு 600 கன அடி செல்கிறது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணைக்கு விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணைக்கு, மழை காலங்களில் நீர் தேக்க பகுதியிலிருந்தும். அவ்வப்போது சோலையார் அணையிலிருந்தும் திறக்கப்படும் தண்ணீரும் வருகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவுக்கு திறக்கப்படும் தண்ணீர், அங்கிருந்து சர்க்கார்பதியிலிருந்து துவங்கும் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.

இந்த ஆண்டில் கடந்த மாதம் இறுதியிலிருந்து, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ததால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும், சோலையார் அணையிலிருந்து வினாடிக்கு 800 முதல் 1000 கன அடி என தினமும் குறிப்பிட்ட கனஅடி தண்ணீர் திறப்பால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசத்துக்கு தேவையான தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு கொண்டுசெல்லும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும், தூணக்கடவு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தூணக்கடவு அணை மொத்தம் 22 அடியாகும். தற்போது 12 அடி தண்ணீர் உள்ளது.

இருப்பினும், இன்னும் சிலநாட்களில் தூணக்கடவு அணையிலிருந்து சர்க்கார்பதியிலிருந்து ஆரம்பிக்கும் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்போது 28 அடியாக இருப்பதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி