குடிநீர், கழிப்பறை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லா திருமங்கலம் ரயில் நிலையம்: முக்கிய ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் தொடரும் அவலம்

திருமங்கலம்: குடிநீர், கழிப்பறை, பயணிகள் அமர நாற்காலி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளம் இன்றி திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் இயங்கி வருவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை – நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் முக்கியமானதாக அமைந்துள்ளது. மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் நின்று செல்லும் இந்த ரயில்வே ஸ்டேசனில் சென்னை, பெங்களூரு, புனலூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்கின்றன. சமீபத்தில் மதுரையிலிருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது.

இதனால் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் பராமரிப்பு பணிகளை தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்எல்சி நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது. கட்டிட பணிகள் நிறைவடைந்து 6 மாதங்களை கடந்த பின்பும் இந்த புதிய கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதேபோல் ஸ்டேசனுக்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொதுக்கழிப்பறையும் திறக்கப்படாமல் இருக்கிறது. ரயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமென்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல் பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

இதனால் பயணிகள் ரயில்கள் வரும் வரையில் நின்றுகொண்டே இருக்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது. பயணிகளுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரயில் பயணிகளின் முக்கிய தேவையான குடிநீர் வசதி திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் இல்லை. இங்குள்ள இரண்டு பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதில் காற்றுதான் வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கிவரும் நிலை தொடர்கிறது. இது தவிர முதலாவருது பிளாட்பாரத்தினை உயர்த்தி, அகலப்படுத்தும் பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலில் ஏறி., இறங்க பயணிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து திருமங்கலத்தினை சேர்ந்த லட்சுமி என்பவர் கூறுகையில், ’’திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. சென்னை செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் ஸ்டேசனுக்கு நடந்து செல்ல இயலாது. ஏனெனில் ஸ்டேசன் பகுதியில் உள்ள நடைமேடைகளில் விளக்குகள் எரிவதில்லை. அந்த வளாகம் முழுவதும் இருளாக காணப்படுகிறது.

முதல் பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் எனக்கூறி நடைமேடையை அடித்து அகற்றியுள்ளனர். புதிய நடைமேடையை முழுமையாக அமைக்காமல் இருக்கிறது. அங்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் அதில் ஏற இயலவில்லை. ஸ்டேசனில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடைக்கிறது. திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை. நாட்டில் அதிவேக ரயில்கள், இடைநில்லா ரயில்கள் என பல்வேறு புதிய பெயர்களில் நவீன வசதிகளுடன் ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஆனால் ஒரு ரயில் நிலையத்தின் நிலை இதுபோல் இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. தற்போது மெட்ரோ ரயில் திருமங்கலத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் அதன் தரத்தினை உயர்த்தவேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும் என்றார்.

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்