திருக்கோயில் குடமுழுக்கு நடத்தப்படுவது தொடர்பாக சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (10.04.2023) வினா – விடை நேரத்தின்போது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடையளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி செட்டிகுளம் கிராமத்தில் அமைந்திருக்கின்ற அருள்மிகு பெருமாள் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தபடுமா? ஆம் எனில் எப்போது?

அமைச்சர்: ஆலத்தூர் ஊராட்சி செட்டிகுளம் கிராமத்தில் அமைந்திருக்கின்ற அருள்மிகு பெருமாள் திருக்கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள தற்போது மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மற்றும் மண்டல வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு மாநில வல்லுநர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்தாண்டு இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும். ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் என்கின்ற அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் 1793 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்து நீண்ட ஆண்டுகள் ஆகிறது. எனவே, சிதிலமடைந்த இக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்து தர அமைச்சர் முன் வருவாரா என தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன்.

அமைச்சர்: வெங்கனூர் அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் என்பது 400 ஆண்டுகளுக்கு முந்தைய திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கின்றது. தமிழக முதல்வர் இப்படி இருக்கின்ற திருக்கோயில்களை எல்லாம் கணக்கில் எடுத்து உடனடியாக திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதற்கிணங்க இந்த ஆட்சி ஏற்பட்டவுடன் இந்த திருக்கோயிலையும் தொல்லியல் துறை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து மண்டல குழுவின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளார்கள். இத்திருக்கோயிலின் திருப்பணிகளுக்கு சுமார் ரூ.60 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருக்கின்றது. உபயதாரர்களும் இந்த திருக்கோயில் திருப்பணிக்கு தயாராக இருக்கின்ற நிலையில் ஓரிரு மாதங்களில் திருப்பணிகள் தொடங்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயண ஆருணேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு எதிர்க்கட்சி தலைவர் அன்றைய முதலமைச்சர் ரூ.83.50 லட்சம் நிதி ஒதுக்கி தந்தார். அதில் வேலைகள் முழுவதும் முடிவதற்கு முன்பாகவே திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுக்காத காரணத்தினால் ரூ.8.13 லட்சம் திருப்பி அனுப்பி விட்டார்கள். பழமை வாய்ந்த அந்த கோயிலுக்கு ரூ.8.13 லட்சம் தொகையை திரும்ப வழங்கி மேலும் கூடுதல் நிதி வழங்கி நிலுவையில் உள்ள பணிகளை அனைத்தும் முடித்து தருவதற்கு அமைச்சர் முன் வருவாரா என கேட்டு அமைகிறேன்.

அமைச்சர்: உறுப்பினர் கோரிய அருள்மிகு ஆருணேஸ்வரர் மற்றும் இலட்சுமி நாராயணசுவாமி திருக்கோயிலுக்கு கூடுதல் நிதி வேண்டுமென்று கேட்டு இருக்கின்றார். அதற்கான கருத்துரு இணை ஆணையாளர் வாயிலாக பெறப்பட்டிருந்தால் இன்றைய தினமே தமிழக முதல்வர் உத்தரவு பெற்று அந்த பணம் விடுவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் உறுப்பினர் கோரிய அந்த திருக்கோயிலுக்கு இன்றைய தினமே இணை ஆணையரை நேரில் சென்று ஆய்வு செய்து கூடுதலாக நிதி தேவைப்பட்டாலும் அந்த நிதியையும் துறை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்