திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்

தன் மீது ஆறாக் காதல் கொண்ட பக்தனுக்கு, பகவான் எத்தனை எளியனாக மாறுகிறான் என்பதற்கு திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் ஒரு எடுத்துக்காட்டு. அந்த பக்தனின் விருப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்கிறார். பக்தனின் எண்ணம் பொது நல நோக்கோடு அமைந்திருக்கும் நேர்த்தியைப் பாராட்டும் வகையில்! பக்தனும், பெருமாள் மீதான தன் அளவிலா பக்தியைத்தான் எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறான்! எற்றினை, இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை, அண்டத்து அப்புறாத்து உய்த்திடும் ஐயனை, கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை குருமா மணிக்குன்றினை நின்றவூர்.

நின்ற நித்திலத் தொத்தினை காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே- என்று பாடிப் பரவசப்பட்ட அந்த பக்தன் வேறு யாருமல்ல, திருமங்கையாழ்வார்தான். அதாவது, ‘எம்பெருமானே நீ உறுதியும், வலிமையும் மிக்க காளை போன்றவன். இமயமலையில் நிரந்தரமாக உறையும் ஈசனே நீதான். இப்பிறவியில் என் தகுதிக்கேற்ப நற்பயன்களை அருளும் தயாபரன். மறுமை இன்பத்தையும் வாரி வழங்கும் மருத்துவன். முழுமையான ஆற்றலைக் கொண்டவன், அண்ட சராசரங்களைக் கடந்த மோட்ச உலகிற்கு அடியவர்களை அன்போடு அழைத்துச் செல்லும் கருணாமூர்த்தி.

வலது கையில் ஒப்புயர்வற்ற சக்கரத்தைக் கொண்டு, அதன் மூலம் தம் பக்தர்களைப் பகைக்கும் எவருக்கும் எமனாக விளங்குபவன், நீலமணிகளால் ஆன குன்றுபோன்று ஒளிர்பவன், திருநின்றவூர் திருத்தலத்தில் அருள் புரியும் முத்துக் குவியல் நீயே. தென்றல் போல மென்சுகம் அளிப்பவன். நீர் போல உயிர் காப்பவன். இத்தகைய அருங்குணத்தானை நான் திருக்கண்ணமங்கையில் கண்டேன்’ என்று பாடி மகிழ்கிறார். இப்படி ஒரு பக்தனைப் பெற்ற பெருமாள், அவனிடத்தே மயங்கியதில் தவறேது? மயங்குவது மட்டுமல்ல, ஆழ்வாரையே தன் ஆசானாகவும் ஏற்க விருப்பம் தெரிவித்தது இன்னும் வியப்பூட்டும் தகவல்! இத்திருத்தலத்தின் மீது பத்துப் பாசுரங்களை இயற்றிய திருமங்கையாழ்வார், அவற்றில் பத்தாவது பாடலில், ‘இந்தப் பாடலையும், இதற்கு முந்தைய என் ஒன்பது பாடல்களையும் கற்றவர்கள் ‘விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்துவர்’ என்று குறிப்பிடுகிறார்.

அதோடு விட்டாரா, விண்ணில் விண்ணவர் கோவாகத் திகழும் திருமாலும் விருப்பமிருந்தால் ‘கண்ண நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’ என்று அறிவிக்கிறார்!உடனே பெருமாளும் அதற்கு இணங்கி, தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். இதற்காகவே அவர் பெரியவாச்சான் பிள்ளை என்ற வியாக்யான பண்டிதராக அவதரிக்க, திருமங்கையாழ்வார் அவருக்குக் கற்றுக்கொடுக்கும் நம்பிள்ளையாகத் தோன்றினார்! எத்தனை நயம் மிக்க சம்பவம்! ‘கார்த்திகையில் கார்த்திகையுதித்த கலிகன்றி வாழியே’ என்ற நம்பிள்ளைக்கான வாழித் திருநாமத்தில் இடம்பெறும் ‘கலிகன்றி’ என்ற பதம் கலியன் அதாவது திருமங்கையாழ்வார் என்ற பொருள் தருவதிலிருந்து இந்த சம்பவத்தை சாட்சிபூர்வமாக அறியலாம்.

அத்தகைய எளிய, கருணைமிக்க பெருமாளை இந்தக் கோயிலில் அவரது கருவறையில் தரிசிக்கும்போது அந்த பிரமாண்டத் தோற்றம் பெருவியப்பைத் தருகிறது. ‘இவரையா தன்னிடம் வந்து கற்றுக்கொள்ளும்படி திருமங்கை சொன்னார், என்ன தைரியம் அவருக்கு!’ என்ற பிரமிப்பும் தலைதூக்குகிறது. ஸ்ரீ தேவி-பூதேவி சமேதராக, சதுர்புஜனாக நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமானே எளியவராகத் தன்னைக் குறுக்கிக்கொண்டாரென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற சுயமதிப்பீடு நமக்குள் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.கோயிலுக்கு முன்னால் தர்சன புஷ்கரிணி பரந்து விரிந்திருக்கிறது.

இதுவே விருத்த காவிரி என்ற வெட்டாறு என்றும் சொல்லப்படுகிறது. சம்பிரதாயமாக ராஜகோபுரம், பலிபீடம், துவஜஸ்தம்பம் எல்லாம் அமைந்திருக்க, உள்ளே வலது பக்கம் மணவாள மாமுனிகள் நம்மை வரவேற்கிறார். இடது பக்கம் செண்பக பிராகாரம். கருவறை பிராகாரத்தில் அபிஷேகவல்லித் தாயாரை தரிசிக்கலாம். தவமிருந்து தன்னை மணந்த பிராட்டியை தர்சன புஷ்கரிணியிலிருந்து நீரெடுத்து பெருமாளே அபிஷேகம் செய்ததால் தாயாருக்கு இந்தப் பெயர். ஊர்ப் பெயரை வைத்து ‘கண்ணமங்கை’ என்றும் அழைக்கிறார்கள். தாயாரின் வலது பக்கம் விநாயகர், இடது பக்கம் கிருஷ்ணன் என்று கொலுவிருந்து நாச்சியாரின் நல்லாசிக்கு நமக்குக் கட்டியம் கூறுகிறார்கள். திருச்சுற்றில் ஸ்ரீ தேவி – பூதேவி சமேத திருமாலையும், அருகே ராமானுஜரையும் தரிசிக்கலாம்.

தாயார் சந்நதிக்குப் பின்னால் வசந்த மண்டபம் காட்சி தருகிறது. அடுத்தடுத்து பரமபதவாசல், ஆண்டாள், ஹயக்ரீவர், நிகமாந்த தேசிகர், கோதண்ட ராமஸ்வாமி சந்நதிகள் என்று தரிசித்து பெருமாளைப் போன்றே பிரமாண்டமான கோயிலின் எல்லாப் பகுதிகளையும் பக்தியுடன் ரசிக்கலாம். இவர்கள் மட்டுமல்ல, கருவறைச் சுற்றில், கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், வாமனர், பரசுராமர், ஹிரண்ய சம்ஹாரம், பலராமன், ஸ்ரீ ராமன், பத்தராவிப் பெருமாள், ஸ்ரீ வேணுகோபாலன், பிரம்மா, பரமபதநாதன், கஜேந்திர வரதன், குபேரன், சரஸ்வதி, லக்ஷ்மி பூவராகன், ஹஸ்த பாவ புத்தர் என்று தரிசிக்கத் தரிசிக்கத் திகட்டாத இறைவடிவங்கள்…

இறைவனோடு பக்தர் ஐக்கியமாகும் பெரும்பேறு தந்த தலம், இந்த திருக்கண்ணமங்கை. அந்தப் பேற்றைப் பெற்றவர் திருக்கண்ண மங்கையாண்டான் என்ற பக்தர். இவர் நாதமுனிகளுக்கு (நாலாயிர திவ்ய பிரபந்தங்களைத் தொகுத்த மகான்) சீடராக விளங்கியவர். கோயிலின் உட்புறத்தே புல்லைச் செதுக்கி, செப்பனிட்டு உழவாரப்பணி செய்துவந்தார். இவருக்குப் பெருமாளே அடைக்கலம். எப்போதும் இந்தக் கோயிலே கதியென்று கிடப்பார். தன்னை நாயினும் கடையேனாகக் கருதிக்கொண்டு, பெருமாளுக்கும், பெருமாள் அடியவர்க்கும் தன்னால் இயன்ற எல்லா ஆராதனைகளையும் செய்துவந்தார். இந்தப் பெருமாளே தன்னை எளியவனாகக் காட்டிக்கொண்டபோது, தான் அவருக்கு எளியனாக இருப்பதே அவருக்கு தான் செலுத்தும் பக்தியின் அடையாளம் என்றே அவர் கருதினார்.

அதனாலேயே தன்னை ஒரு நாயாகவே அவர் பாவித்துக்கொண்டார் என்றும் சொல்லலாம். ‘எண்ணம்போல வாழ்வு’ என்பதற்கிணங்க அவரது மரணமும் சம்பவித்தது. ஒருநாள் அவர் பாகவத கோஷ்டியுடன் பெருமாளைப் பாடிப் பாடி தன்வயமிழந்து கோயிலுக்குள் நுழைந்தார். உடனே அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, அவர் அப்படியே ஒரு நாயாக உருமாறி, கருவறைக்கு ஓடிச் சென்று பெருமாளோடு ஐக்கியமானார். தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத பக்தி பாவத்திலேயே திருக்கண்ணமங்கையாண்டான் வாழ்ந்துவந்ததால், அவரால் அவன் உள்ளப்படியே உருமாற முடிந்திருக்கிறது. பகவானுடன் நேரடியாக இரண்டறக் கலக்கவும் முடிந்திருக்கிறது! தாயார் சந்நதியை தரிசிக்கும்போது சங்கீதமான ரீங்கார ஒலியைச் சிலசமயம் கேட்கலாம்.

திருமாலை மணமுடிக்கத் தயாராக இருக்கும் நாச்சியாரின் திவ்ய தரிசனத்துக்காக தினந்தோறும் காத்திருக்கும் தேனீக்களின் ரீங்காரம்தான் அது. பல நூற்றாண்டுகளாகக் காணப்படுவதாகச் சொல்லப்படும் ஒரு அகன்ற தேனடையில் குடியிருக்கும் அந்தத் தேனீக்கள், தரிசனத்துக்கு வரும் பக்தர் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ஒரு தேனடையில், குறிப்பிட்ட அளவு தேன் சேருமானால், அதைச் சேர்த்த தேனீக்கள் அதை விட்டுவிட்டு வேறோரிடத்தில் புதிதாக தேனடை கட்டிக்கொண்டு அங்கே தேன் சேகரிக்கத் தொடங்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தேனடை வருடக்கணக்காக இருப்பதையும், தேனீக்கள் (எத்தனைப் பிறவிகள் எடுத்து, எத்தனை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனவோ!) வேறொரு புது தேனடையை உருவாக்காதிருப்பதையும் அறிந்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்தத் தேனீக்கள் இப்படி தினந்தோறும் தாயாரின் திருவுருவைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைவானேன்? விடை தேட புராண காலத்துக்குப் போக வேண்டும். பாற்கடலைக் கடைந்தபோது கற்பக மரம், காமதேனு, உச்சைஸ்ரவஸ் என்ற வெண்குதிரை என்று அடுத்தடுத்து அரிய பொருட்கள் பல வெளிப்பட்டன. அவற்றை மேற்பார்வையிட்ட எம்பெருமானின் கம்பீரமான அழகுத் தோற்றம் கண்டு வியந்து நின்றாள் திருமகள். ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் இப்படி விதவிதமான அழகோடு பொலிந்து நிற்கும் பரந்தாமனைக் கண்டு பரவசப்பட்டாள் திருமகள். இந்தத் தோற்றத்தில் திகழும் இவரை மணம் புரிய வேண்டும் என்று விரும்பினாள்.

ஆனால் பகவான் அவளை கவனிக்காததுபோல சற்று அலட்சியமாகத் திரும்பிக் கொண்டதில் லேசாக வருத்தம் கொண்டாள். ‘இவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது எனக்குத் தெரியும்’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்ட திருமகள் நேராகப் பூவுலகில் திருக்கண்ணமங்கை திருத்தலத்துக்கு வந்த அவள், திருமாலை நோக்கிக் கடுமையான தவத்தில் ஆழ்ந்தாள். தேவியின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்ட வைகுண்டவாசன், சேனை முதலியாரை (விஷ்வக்சேனர்) அழைத்தார். அவரிடம் தான் தேவியைத் திருமணம் புரிந்துகொள்ளும் முகூர்த்த நாள், நேரத்தைக் குறிப்பிட்டு ஒரு ஓலையைக் கொடுத்தனுப்பினார். அதை எடுத்துக்கொண்டு திருக்கண்ணமங்கை வந்த விஷ்வக்சேனர், தேவியிடம் கொடுத்தார்.

அப்படியே தானும் அங்கேயே தனி சந்நதியும் கொண்டார். பொதுவாக பிற கோயில்களில் நான்கு கரங்களுடன் நாம் காணும் சேனை முதலியார் இங்கே இரண்டு கரங்களுடன் திகழ்கிறார். பெருமாள்-தேவி திருமணத்தை தரிசிக்கும் சாதாரண மனிதராக – எளியவனான பெருமாளுக்கு உகந்தவனான தானும் எளியவனே என்பதைக் காட்டும் வகையில் – காட்சியளிக்கிறார் அவர். விஷ்வக்சேனர் கொண்டுவந்து காட்டிய ஓலையைக் கண்டு, தன் தவம் பலித்த சந்தோஷத்தில் ஆழ்ந்தாள் திருமகள். பகவானும் உடனே புறப்பட்டு வந்து தர்சன புஷ்கரிணி தீர்த்தத்தால் அவளுக்கு அபிஷேகம் செய்து தனது பட்டத்து ராணியாக்கிக்கொண்டார். இந்தத் திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இத்தலத்தில் வந்து குவிந்தார்கள்.

அத்தனை பேருக்கும் இடம் வேண்டுமே என்ற கவலை லேசாகத் தலை காட்டியபோது, அவர்கள் அனைவரும் தேனீக்களாக உருக்கொண்டார்கள். சங்கீதமாக ரீங்கரித்து மணமக்களைச் சுற்றிச் சுற்றி வந்து அந்தத் திருமண வைபவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகும் அவர்களுக்கு அந்தத் திருத்தலத்தை விட்டகல மனமில்லை. தங்களுக்காக ஒரு கூடு கட்டிக்கொண்டு தேனீக்களாக அங்கேயே வாசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டில் இவர்கள் அபிஷேகவல்லித் தாயாரின் அன்பையும், கருணையையும் தேனாக சேகரித்தார்கள், சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ இத்தனை நூற்றாண்டுகளாகியும் அந்தத் தேனடை அப்படியே நிலைத்திருக்கிறது! இந்தத் திருமணத்தை பிரம்மன் முன்னின்று நடத்தி வைத்ததாகவும் அதற்காகவே பிரத்யேகமாக நான்கு வேதங்களைத் தூண்களாகக் கொண்டு ஒரு மண்டபத்தை உருவாக்கியதாகவும் சொல்வார்கள்.

அப்படி பெருமாள் ஸ்ரீ தேவி திருமணம் நடந்த இந்த மண்டபத்தில் மேல்விதானத்தின் நடுவே 12 ராசிகள் கொண்ட ராசிச்சக்கரம் காணக்கிடைப்பது அபூர்வமானது.  வள்ளலார் ராமலிங்க அடிகள், ‘உலகம் புரக்கும்பெருமாறன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி….’ என்று தொடங்கும் பாடல் மூலம் தாயாரைப் பாடி மகிழ்ந்திருக்கிறார். 1608ம் ஆண்டு வாக்கில் அச்சுத விஜய ரகுநாத நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயில் புனரமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் தினசரி செலவுக்காக ஏராளமான நிலதானமும் செய்திருக்கிறார் மன்னர். திருக்கண்ணமங்கைத் தலைவன், பத்தராவிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது பக்தர்கள் துயர் துடைக்க ஆவியாய் வேகமாக வந்து அருள்பாலிப்பவர் என்று பொருள். இவர் பக்தவத்சலன் எனவும் போற்றப்படுகிறார்.

பக்தர்களுடன் எப்போதும் இருந்து அவர்களைக் காப்பவன் என்று பொருள். பெரும்புறக்கடல் என்று இன்னொரு பெயரும் இவருக்கு உண்டு. திருமகளை மணப்பதற்காக பாற்கடலை விட்டுப் புறத்தே வந்து இங்கு எழுந்தருளியிருப்பதால் இந்தப் பெயர். எப்படிப் போவது: கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. கும்பகோணம்-குடவாசல் – திருவாரூர் பாதையில் திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணமங்கை திருக்கோயில். கும்பகோணம், திருவாரூரிலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 12 மணிவரையிலும், மாலை 5.30 முதல் 8.30 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104.

தியான ஸ்லோகம்

ஸ்ரீ பக்த வத்ஸல ஹரிர் புவி க்ருஷ்ணபுர் யாம்
தத் வல்லபா ப்ரிய தமா த்வ பிஷேக வல்லீ
தீர்த்தம் ச தர்சந ஸரோவரமுத் பலாக்யம்
தத் வ்யோ மயாநபி தத்ர ப்ருகு ப்ரஸந்ந:

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை