திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவல பாதையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்: பக்தர்கள் பாராட்டு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உலக பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மாதந்தோறும் பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலைக்கு அடுத்ததாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தான் உகந்த கோயிலாக எண்ணி திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கிரிவலம் செல்ல வருகின்றனர்.

இவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு, சிவனடியார்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்பினர் கிரிவல பாதையை சுற்றி வழி நெடுகிலும் அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். அதேப்போல், நேற்று முன்தினம் பவுர்ணமி தினம் என்பதால் அதிகாலை முதல் இரவு வரை சுமார் 25 ஆயிரக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இதனிடையே, பக்தர்கள் அன்னதானம் பெற்று உணவருந்தி விட்டு வீசிய பேப்பர் பிளேட், பாக்கு மட்டை தட்டு உள்ளிட்டவைகள் குப்பைகளாக அதிகளவில் சேர்ந்தது.

அதனை சுத்தம் செய்யும் வகையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பேருராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்டரை ஆசான் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 பேருடன் இணைந்து கிரிவலப் பாதையை தூய்மை செய்யும் பணியினை மேற்கொண்டனர். இந்தப்பணியினை பேரூராட்சி தலைவர் யுவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மெகா தூய்மை பணியின்போது கல்லூரி முதல்வர் ஞானவேல், கல்லூரி இயக்குநர் குமரேசன், முத்தையா, பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, கவுன்சிலர் பழனி, சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் திமுக நிர்வாகிகள் சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்