திருகபித்தலம் கஜேந்திரவரதப் பெருமாள்

`கஜேந்திர மோட்சம்’ கதை தெரிந்திருக்கும். இந்த புராண சம்பவத்துக்குப் பிறகுதான் ‘வைகுண்டம் இங்கிருந்து எவ்வளவு தூரம்?’ என்ற அப்பாவித்தனமான கேள்வியும், ‘கூப்பிடு தூரம்தான்’ என்ற தத்துவார்த்தமான பதிலும் புழக்கத்துக்கு வந்தன. அதாவது ஒரு பக்தனின் அழைப்பு ஒன்று போதும், பகவான் ஓடோடி வந்து அவனுக்கு அருள் புரிவார் என்பதுதான் இந்தக் கேள்வி&பதிலின் உள்ளீடு. ‘நீ என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி பத்தடி எடுத்து வைப்பேன்’ என்ற பேரருளின் திருக்கருணை அது. பரந்தாமனிடம் பக்தி கொள்வது என்பது பூர்வ ஜன்மத் தொடர்ச்சிதான் என்பதை இந்த கஜேந்திர மோட்ச கதை விளக்குகிறது. யதார்த்தமாகச் சொல்வதானால், முந்தைய ஜன்மத்தில் ஆன்மிக வங்கியில் நாம் செலுத்தியிருக்கும் பக்தி என்ற ஃபிக்ஸட் டெபாஸிட், இந்த ஜன்மத்தில் நமக்கு இறை வழிபாடு என்ற வட்டியைத் தருகிறது.

சரி, கபித்தலம் (தமிழில் கவித்தலம்) என்ற இந்த தலத்தின் புராண ஆதாரம்தான் என்ன?

இந்திரத்யும்னன், பாண்டிய நாட்டு மன்னன். நிலையாமையை நன்கு உணர்ந்திருந்த அவன், உளன் என்பதற்கும் இலன் என்பதற்கும் காரணமான பரந்தாமனை உளமாறத் தொழுது வந்தான். நம்முடைய ஆறு மாதம் என்பது தேவர்களுக்கு ஒரு பகல் அல்லது இரவுப் பொழுது என்ற கால அளவை, தன் பக்தியால் உணர்ந்தவன் இந்திரத்துய்மன். அதாவது திருமால் பக்தியில் அவன் ஆழ்ந்துவிட்டானானால் அவனுக்கு நேரம் காலம் தெரியாது; நேர் எதிரே நிற்பவரும் தெரியாது. தன்னை மறந்த ஏகாந்த நிலையில் திளைத்துவிடுவான். பசி, உறக்கம் என்ற பலவீனங்கள் அவனிடம் தோற்றுப் போய்விடும். களைப்பு, ஓய்வு என்பதையெல்லாம் கடவுள் வழிபாட்டில் குறுக்கிட அவன் விடுவதில்லை. இப்படி சுய உணர்வுகளுக்குக் கட்டுப்பாடு விதித்துக்கொண்ட அவனால், புற உணர்வுகளாலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிந்தது. ஒரு அரசனாக அவன் ஆற்ற வேண்டிய பணிகள் எல்லாம், தாமாக, இயல்பாக, எந்தத் தொய்வுமின்றி நிறைவேறின. அவரவர் தத்தமது பொறுப்புணர்ந்து செயலாற்றினார்கள் என்றால், அது அவன் வழிபட்ட மகாவிஷ்ணுவின் அருட்கடாட்சம் தவிர வேறு என்ன?

இத்தகைய பக்தனுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று அந்தத் திருமாலே நினைத்துகொண்டார் போலும்! ஆனால், ஒரு தவமாக தினமுமே வழிபட்டுக் கொண்டிருந்த அவனுக்கும் எளிதாக அவர் மோட்சம் பாலிக்க அவர் தயாராக இல்லை போலிருக்கிறது. அதனால் அவனையும் ஒரு சோதனைக்குட்படுத்த அவர் தீர்மானித்தார். இதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல இரு உயிர்களுக்கு ஒரே காலகட்டத்தில் மோட்ச பிராப்தி அருளவும் சித்தம் கொண்டார்.

அதன்படி மன்னன் அரண்மனைக்கு துர்வாச முனிவர் வந்தார். தன் இயல்புப்படி, யாரையும், எதையும் கவனிக்காத மன்னன் இறை உணர்வில் அமிழ்ந்திருந்தான். இமைகள் விலகி, விழிகள் வெளியே தெரிந்தாலும், அவை எதையும் பார்க்காத வெறுமையைக் கொண்டிருந்தன. இதை கவனித்த துர்வாசர், மன்னன் தான் வந்ததை கண்டும் காணாததுபோல இருக்கிறான் என்றே கருதினார். அல்லது தியானப் போர்வையில் தன்னைப் புறக்கணிக்கிறானோ? வழக்கம்போல முனிவருக்குக் கோபம் மூக்கின்மேல் வந்தமர்ந்தது. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவன் முன்னே போய் நின்றார். சித்தமெல்லாம் ஸ்ரீதரன் மயமாக, உன்மத்த நிலையிலிருந்த இந்திரத்யும்னன், அப்போதும் அவரை கவனிக்கவில்லை.

அவ்வளவுதான், துர்வாசரின் கோபம் மூக்கிலிருந்து தலைக்கேறியது. தன்னை அவமதித்தவன், அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, தண்டனைக்குரியவனே என்ற அவருடைய ‘நியாயம்’ இந்திரத்யும்னனையும் பற்றியது; அவன் சபிக்கப்பட்டான். துர்வாசர் போன்ற முனிவர்களின் சாபம், எதிர்கால நன்மைகளையும், பிறர் நலன்களையும் உத்தேசித்தே இடப்படுகிறது. சபிக்கப்பட்டவர் அப்போதைக்கும், சாபம் நிவர்த்தியாகும் காலம்வரையிலும் துன்புறுவார் என்றாலும், முனிவரின் உயரிய நோக்கம் நிறைவேற, இந்த அவஸ்தையைப் பொறுத்துக்கொள்வதும் பெரிய தர்மம்தான்!

அதனால்தான் துர்வாசர் இந்திரத்யும்னன்னை ஒரு யானையாக மாறித் திரியும்படி சபித்தார். முனிவரின் கோபத்துக்கு ஆளானதால் வருத்தப்பட்ட இந்திரதுய்மன், தான் எப்பிறவி எடுத்தாலும், பரந்தாமனைத் தொழுத
படியே வாழவேண்டும் என்று அவரிடம் வேண்டிக்கொண்டான். துர்வாசர் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். சாபத்துக்கு என்ன விமோசனம் என்று கேட்பான் என்று நினைத்தால், அந்தத் துன்பத்திலும் பகவானை நினைக்கும் பேறு வேண்டும் என்று கேட்கிறானே என்று அதிசயித்தார். அவ்வாறே அவன் பெறுவான் என்று உறுதியளித்த முனிவர், ஒரு முதலையால் உன் சாபம் விலகும்; அப்போது பெருமாளே நேரில் உனக்கு தரிசனம் தருவார் என்றும் கூறினார். அதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தான் இந்திரதுய்மன். இத்தனை நாள் தான் கொண்டிருந்த தவநிலை பக்திக்கு அடுத்தப் பிறவியில்தான் தனக்கு பகவான் தரிசனமா? பரவாயில்லை, அப்போதாவது அந்த அற்புதப் பேறு கிடைக்கிறதே என்று நெகிழ்ந்தான்.

முனிவரின் சாபத்தால் விளையப்போகும் இன்னொரு நன்மை, குஹு என்ற அரக்கனுக்கும் விமோசனம் கிடைப்பதுதான். குளத்தில் நீருக்கடியில் மூச்சடக்கிக் காத்திருந்து, அந்தக் குளத்தில் குளிக்க வருபவர்களின் கால்களை அவர்கள் அறியாமல் பற்றி இழுத்து அவர்களைத் திக்குமுக்காடவைத்து, அதைப் பார்த்து மகிழ்வான், குஹு. இதே விளையாட்டை அவன் அகத்திய முனிவரிடம் நிகழ்த்தப் போக, அவர் சினந்து, ‘நீருக்குள் ஒரு முதலைபோல அதிர்ச்சி விளையாட்டு நடத்திய நீ, இந்த நீருக்குள்ளேயே வாழும் முதலையாக மாறுவாயாக’, என்று சபித்துவிட்டார். அவன் நீரைவிட்டு வெளியே வந்தானானால் முற்றிலும் பலம் குன்றியவனாகிவிடுவான் என்ற பலவீனமே இந்த சாபத்தின் சாரம். குஹு விமோசனம் வேண்டினான். ‘நீ வாழும் குளத்தில் கஜேந்திரன் என்ற யானை வரும். அது, முற்பிறவியிலும் சரி, இப்போதும் சரி, பரந்தாமன் பக்தியில் ஆழ்ந்து தோய்ந்தது. அதைப் பற்றினால் உன் சாபம் விலகும்’ என்று வழி காட்டினார்.
இதுநாள்வரை தன் விளையாட்டால் எத்தனை பேர் அதிர்ச்சியுற்றிருப்பார்கள், மன வேதனைக்குள்ளாகியிருப்பார்கள் என்று நினைத்துப் பெரிதும் வருந்தினான் குஹு. முதலையாகி நீருக்குள் அமிழ்ந்திருந்தான். கஜேந்திரனுக்காகக் காத்திருந்தான்.

விஸ்வாமித்திர சாபத்தால் யானையாக மாறிய இந்திரதுய்மன், அந்த நிலையிலும் பரந்தாமனையே உளமாறப் போற்றிவந்தான். பக்கத்திலுள்ள நீர்நிலைகளிலிருந்து அன்றலர்ந்த தாமரை மலர்களைக் கொய்து வந்து பெருமாள் கோயில்களுக்குச் சென்று அவருக்கு சமர்ப்பித்து சந்தோஷமடைந்தான். இந்த வழக்கத்தில் ஒருநாள் குஹு முதலை வாழ்ந்துவந்த குளத்துக்குள் இறங்கினான். அவனுடைய பெரும் பாதங்களின் அதிர்வால் ஒரு அலைபோல விலகி அடித்த நீரின் தன்மை கண்டு திகைத்தான் குஹு. ‘அதோ, கஜேந்திரன் வந்துவிட்டார்’ என்று உற்சாகம் கொண்டு கஜேந்திரனின் முன் காலை நெருங்கினான். பரமனின் பக்தி நெறிகொண்டு ஒழுகும் இந்தப் பாதங்களை நமஸ்கரிக்க வேண்டும், தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் அந்த பாதத்தை நீண்ட தன் வாயால் தொட்டான். குஹுவின் நோக்கம் அறியாத இந்திரதுய்மன், ஒரு யானையின் இயல்பில் தான் தாக்கப்படுகிறோம் என்று நினைத்து அந்தக் குளத்தை விட்டு அகல முயன்றான். இதைக் கண்டு திடுக்கிட்ட குஹு ‘ஐயனே என்னை விட்டுப் போய்விடாதீர்கள்; உங்கள் பாதங்களைப் பற்றி வணங்கவே நான் முயற்சிக்கிறேன். என்னைக் கண்டு பயப் படாதீர்கள். உடல், பொருள், ஆவி அனைத்திலும் அந்த நாராயணனையே ஸ்வீகரித்திருக்கும் உங்கள் பாதம் பணிவது என் பேறு. அதற்கு மறுப்பு சொல்லாதீர்கள்,’ என்று மனதார வேண்டியபடி, மேலும் நெருங்கியது. ஆனால் இந்திரதுய்மன் பயந்து மேலும் விலக, வேறு வழியில்லாமல் குஹு பளிச்சென்று தன் வாய்த் திறந்து அந்தப் பாதத்தைப் பற்றியது.

அதேசமயம், தன் சாபவிமோசன கட்டம் இதுதான் என்பதை உணர்ந்த இந்திரத்யும்னன், முனிவர் சொன்னதுபோல பரந்தாமன் தனக்கு இப்போது தரிசனம் நல்க வேண்டுமே என்று வானோக்கிப் பார்த்தான். வானம் நிர்மலமாக இருந்தது. முனிவர் சொன்னது பொய்த்து விடுமோ, மோட்சம் கிட்டாது போய்விடுமோ என்று பதறினான். ‘ஆதிமூலமே, என்னை ஆட்கொள்ள மாட்டாயா…?’ என்று கண்களில் நீர் பெருக, தும்பிக்கையை நீள உயர்த்தி இறைஞ்சினான். இறை தரிசனத்தைக் காட்டிலும், இறையடியார் பாதம் பற்றுவதே சிறந்த பக்தி என்றுணர்ந்த குஹு, தன் கூரிய பற்களால் மேலும் இறுக இந்திரத்யும்னனின் பாதத்தைப் பற்றினான்.

பளீரென வானில் ஒரு பேரொளி தோன்றியது. கருடனின் ‘கீய்க்..’ கூவலும், வானத்தையே மறைப்பது போன்ற பிரமாண்ட சிறகுகளின் வீச்சும் கட்டியம் கூற, கோடி சூர்யப் பிரகாசராக பரம்பொருள் அந்த கருடனின் ஆரோகணித்திருந்தார். அவரது வலது கரத்தில் சுழன்றபடி மின்னிய சக்கரம் பெருமாளின் அனுமதிக்காகக் காத்திருந்தது. தன் கருணைக் கண்களால் இந்திரத்யும்னனையும், குஹுவையும் பார்த்தார் பரந்தாமன். குஹுவின் கவ்வலிலிருந்து இந்திரத்யும்னனை விடுவிக்க வேண்டும். குஹுவோ ஓர் அடியார் பாதம் பற்றிய மேலான பக்தி உணர்வில் இறுகியிருந்தான். இந்திரத்யும்னனோ பகவான் பேரருளால் விரைவில் மோட்சம் ஏக வேண்டுமே என்று துடித்துக்கொண்டிருந்தான்.
ஒரேவழி, சக்ராயுதத்தை ஏவுவதுதான். அது முதலையின் கழுத்தைக் கூறுபோட, யானையின் பாதம், முதலையின் வாயோடு விடுபட்டது. பளிச்சென்று யானையும், முதலையும் மறைந்து இந்திரத்யுமனும், குஹுவும் சுய உரு பெற்று பாற்கடல் நாதனை வணங்கி நின்றார்கள். இருவரையும் பகவான் அரவணைத்துக்கொண்டு அவர்களுக்கு மோட்சப்பேறு அளித்தார். மூலவர் கஜேந்திர வரதர் ஆனார். அப்படி ஈருயிர்க்கு ஒரே சமயத்தில் நற்கதி அளித்த திருத்தலம்தான் கவித்தலம்.

திருமழிசை ஆழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது. மகாபாரத காலத்துக்கும் முந்தயவராக திருமழிசை ஆழ்வார் கருதப்படுகிறார். அதனாலேயே, அவர் பாடியதாலேயே, இந்தக் கோயில் எவ்வளவு தொன்மையானது என்பது புரிகிறது.

கூற்றமும் சாரா கொடு
வினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றங்
கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு

– என்பது அவர் இயற்றிய பாசுரம். ஆனால் இந்தப் பாடலில் கவித்தலம் என்ற திவ்ய தேசத்தின் பெயர் நேரடியாகப் பேசப்படவில்லை. ‘பாற்கடலில் அரவணையில் துயிலும் இந்த மாயன், காவிரியாற்றங்கரையில் அருள்
புரிபவன். இவன் அருளிய சரமஸ்லோகம் என் உள்ளத்தில் நிலைத்து நின்றுவிட்டது. இதனால், என் உயிர்கொள்ளத் துணியும் யமனைக் கண்டு நான் அஞ்சவேண்டிய அவசியம் இல்லாது போய்விட்டது. என்னைத் தீண்டத் துணியும் எந்தத் தீவினை பற்றியும் எனக்குச் சிறிதும் அச்சமில்லை, தீய பயன்களைத் தரும் செயல்களும் என்னை நெருங்காது,’ என்று மகிழ்ந்து சொல்கிறார் திருமழிசையாழ்வார். ‘ஆற்றங்கரை கிடக்கும் மாயன்’ என்ற சொற்றொடர் மூலமாகத்தான் ஆழ்வார் குறிப்பிடும் திவ்ய தேசம், காவிரிக்கரையில் அமைந்த கவித்தலம் என்று ஊகிக்க முடிகிறது. இதை பல ஆசார்யார்கள் ஏற்றுக்கொண்டு, உறுதியும் படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான், ‘மூலமே யென்ற கரிமுன் வந்திடர் தொலைத்து நீலமேகம் போல் நின்றான்’ என்று கூறி வியந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,

‘காணியும், இல்லமும்,
கைப்பொருளும், ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும்
பேர் உறவும் சேணில்
புவித்தலத்தில் இன்பமும்
பொங்கு அரவம் ஏறிக்
கவித்தலத்தில் கண்துயில்வோன் கால்’

என்றும் பாடி மகிழ்கிறார். அதாவது ‘நிலம், வீடு, கைப்பொருள், என்னைப் பெற்றோர், நான் விரும்பிய நல்வாழ்வு, பெருமை மிக்க உறவினர், இவ்வுலக, மேலுலக இன்பம் எல்லாம் எனக்கு எது தெரியுமா? திருக்கவித்தலம் என்னும் இந்த திவ்ய தேசத்தில் ஆதிசேஷன்மீது கண்துயிலும் எம்பெருமானின் திருவடிகளே!’ என்று தன் ஒட்டுமொத்த சரணாகதியைத் தெரிவிக்கிறார் அவர்.

இரண்டு விலங்குகளுக்கு நாராயணன் தரிசனம் கொடுத்த ஒரே திவ்யதேசம், கவித்தலம்தான். தலத்தின் பெயரும் ஒரு விலங்காலேயே உருவானதுதான். அது என்ன விவரம்? சொல்லின் செல்வனான ஆஞ்சநேயன் இந்தத் தலத்துக்கு வந்தபோது, கஜேந்திர வரதர், அவருக்கு ராமனாகவே காட்சியளித்தார். அவரவருக்கு உகந்த உருவமாய்த் தோன்றும் எம்பிரான் இங்கே அனுமனுக்கு ராமனாகத் தோற்றம் காட்டியதில் வியப்பு ஒன்றுமில்லையே! இப்படி ஒரு கபி (குரங்கு) வந்து தரிசித்த தலம் என்பதாலேயே கபித்தலம் என்று வழங்கப்பட்டது. அதுவே தமிழில் கவித்தலமாயிற்று. அதுமட்டுமல்ல, தன் நாயகன் ராமனைப் பட்டாபிஷேக கோலத்தில் ஆஞ்சநேயர் காண விரும்பியதால்தான் இங்குள்ள உற்சவர் கையில் செங்கோலுடன் விளங்குகிறார் என்றும் ஒரு நயமான விளக்கம் கிடைத்தது. இத்தலத்து சம்பவத்தை ஒட்டியே, ‘கஜேந்திரன் கூக்குரல் இட்டபோது, ‘ஏன்?’ என்று கேட்டவன் நீதானே?’ என்று விராதன் ராமரைப் பார்த்து கேட்பது போல கம்பர் தன் ராமாயணத்தில் ஒரு காட்சியை அமைத்திருப்பார்.

இந்த ஆஞ்சநேயர் தவக்கோலத்தில் இங்கே காட்சியளிப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் வியப்பளிப்பதாகும். அவரருகே கஜேந்திர மோட்ச காட்சி, சுதை சிற்பமாக விளங்குகிறது. கஜேந்திரனோடு முதலைக்கும் மோட்சம் அளித்த சக்கரத்தாழ்வாரின் அழகுமிகு சிற்பம் தனிச் சந்நதியில் கொலுவிருக்கிறது. மூலக் கருவறையில் எம்பெருமான் பாம்பணையில் துயில் கொண்டிருக்கிறார். (வருடத்தில் ஒருநாள் கஜேந்திர தீர்த்தத்துக்கு பெருமாள் எழுந்தருளி, தீர்த்தமருளி, கஜேந்திர மோட்ச சம்பவத்தை நினைவூட்டி வருகிறார்) ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்திருக்கிறார்கள். மூலவருக்கு முன்னால் தேவி, பூதேவி, ஆண்டாள், திருமழிசையாழ்வார், சற்று தள்ளி தாயார் (சண்பகவல்லி) சமேதராக உற்சவர் கஜேந்திர வரதர் கையில் செங்கோலுடன் காட்சி தருகிறார். செங்கமலவல்லித் தாயார் தனி சந்நதியில் மூலவராக சேவை சாதிக்கிறார். விலங்குகளுக்கு அருள்புரிந்து ஆட்கொண்ட கஜேந்திரவரதப் பெருமாள், நம் வாழ்க்கைத் தளைகள் என்ற விலங்குகளையும் தகர்த்தெறிந்து நம்மையும் ஆட்கொள்வார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தியான ஸ்லோகம்
“க்ராஹக்ரஹஸ்த கஜேந்த்ர மோக்ஷ வரதோ ரமாமணிர் நாயிகா
புண்யம் வ்யோம விமாநமத்ர விமலம் தீர்த்தம் கஜேந்த்ரஸ்ய ச
தீரே தஸ்ய கபிஸ்தலே ஜலதிஜா நீளா தரப் ப்ரேயஸீ
நித்யம் ஸம்ரமயந் பணீச் வரத நௌசேதே ஸுகம் ப்ராங்க்முக:’’

எப்படிப் போவது: கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் அமைந்துள்ளது கவித்தலம். பாபநாசம் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு. கும்பகோணத்திலிருந்தும், பாபநாசத்திலிருந்தும் பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் 12 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு கஜேந்திரவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கபிஸ்தலம், பாபநாசம் தஞ்சை மாவட்டம் – 614205.

Related posts

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

தேரழுந்தூர் தேவாதிராஜன்

பாரளந்த பெருமானின் புகழ்பாடும் புரட்டாசி!