திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

ஏழுநிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து வணங்கி, அனுமதி பெற்று கோயிலினுள் சென்றால், ‘பெருமாளை பக்தி செய்ய வரும் அடியவர்களே வருக,’ என்றழைப்பதுபோல நம்மை ஆழ்வார்களும், ஆசார்யார்களும் வரவேற்கிறார்கள். இவர்கள் மட்டுமா, அருகிலேயே தனி சந்நதியில் விபீஷ்ணாழ்வாரும் வரவேற்கிறார். ஸ்ரீ ரங்கத்துப் பெருமானை, விமானத்துடன் இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்ற விபீஷணன் இந்தக் கோயிலில் கொலுவிருப்பது எப்படி?அதுவும் பெருமாளின் கருணையே. ‘‘திருவரங்கத்தில் நீ சயனித்த திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயனே, உன் நடையழகையும் காண ஆவலாக உள்ளேன்,’’ என்று விபீஷணன் விரும்பிக் கேட்டுக்கொள்ள, அவனுக்காக இந்தத் தலத்தில் பெருமாள் நடந்து காட்ட, அந்த அழகில் சொக்கிப் போன விபீஷணன் சிலையாக சமைந்து போனான்! அந்த அவனது கோலத்தைதான் நாம் இங்கே தரிசிக்கிறோம். இதே சந்நதிக்குள் இன்னொரு சிலையும் உள்ளது. அது, விபீஷணனின் மகளான திரிசடை (அசோகவனத்தில் சீதைக்குக் காவலாக மட்டுமின்றி, உறுதுணையாகவும், நம்பிக்கை ஊட்டியவளாகவும் இருந்தவள்) என்கிறார்கள். இப்படி விபீஷணனுக்கு நடையழகைக் காட்டிய சம்பவம், இப்போதும் ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அதன்படி, கருவறையிலிருந்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் மெல்ல நடந்து இந்த விபீஷணன் சந்நதிவரை நடையழகு காண்பித்துப் பிறகு
கருவறைக்குத் திரும்புவார்.

உள்ளே, ராஜகோபுரத்தின் வலப்பக்கம் நவகிரக சந்நதி ஒன்று காணப்படுவதும் புதுமையான அமைப்பாக இருக்கிறது. அஷ்டாக்ஷர மந்திரத்தின் முழு சாந்நித்தியமும் திகழும் தலம் இது. அந்த மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமும் ஒவ்வொரு கோயிலைக் குறிக்கிறதென்றும், மொத்த மந்திர சாரமும் திருக்கண்ணபுரம் கோயிலாக விளங்குகிறதென்றும் சொல்வார்கள். அதாவது திருவேங்கடம், திருவரங்கம், முஷ்ணம், நான்குநேரி, சாளக்கிராமம், பத்ரிகாச்ரமம், நைமிசாரண்யம் ஆகிய தலங்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அந்த மந்திரத்தின் ஏழு அட்சரங்களாக விளங்க, எட்டாவது அட்சரமாகவும், ஒட்டு மொத்தப் பெரும்பொருளாகவும் திருக்கண்ணபுரம் விளங்குகிறது; சௌரிராஜப் பெருமாள் அந்த மந்திரத்தின் சொரூபமாகவும், சாரமாகவும் திகழ்கிறார். சௌரி என்றால் யுகந்தோறும் அவதரிப்பவன் என்று பொருள். அந்த வகையில் இந்தத் தலம் எழுபத்தைந்து சதுர்யுகங்களைக் கண்டது என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள். ஆனால், சௌரி என்ற சொல்லுக்கு லௌகீகமாக, தலைக் கேசம் என்றும் பொருள் கொள்ளலாமென்று கூறி, இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தையும் விவரிக்கிறார்கள்.
தரன் என்பவன் இந்தக் கோயிலில் பெருமாளுக்கு நித்திய ஆராதனைகளைச் செய்து வந்தான். ஒருசமயம், இவன் தான் காதலித்த பெண்ணுக்கு ஒரு மலர் மாலையைச் சூட்டி, மகிழ்ந்து, பிறகு அதே மாலையை பெருமாளுக்கும் சூட்டி அழகு பார்த்தான்.

அச்சமயம் அப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த சோழ மன்னன் கோயிலுக்கு வந்தான். ராஜ மரியாதை செய்யவேண்டிய நிமித்தத்தில், ஸ்ரீதரன், பெருமாளுக்கு சூட்டிய மாலையை எடுத்து மன்னனுக்கு அணிவித்தான். மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக்கொண்ட மன்னன் உடனே முகம் சுளித்தான். காரணம், அந்த மாலையில் ஓரிரு தலை முடிகள் ஒட்டிக்கொண்டிருந்ததுதான். கடுங்கோபம் கொண்ட அவன், அர்ச்சகரிடம் விளக்கம் கேட்க, ‘அது பெருமாளுக்குச் சூட்டிய மாலைதான். அவருக்குத் தலைமுடி வளர்ந்துள்ளதால் அவற்றில் ஒன்றிரண்டு மாலையுடன் ஒட்டிக்கொண்டு விட்டது போலிருக்கிறது,’ என்று பளிச்சென்று பதில் சொல்லிவிட்டான். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட மன்னன், நம்பமுடியாதவனாக, உடனே கருவறைக்குள் சென்று பார்க்க, அங்கே பெருமாளின் பின்தலையில் ஏழெட்டு முடிகள் நீண்டு வளர்ந்திருந்தன! அப்படியும் சந்தேகம் விலகாத மன்னன், தான் பார்ப்பது உண்மைதானா என்பதை சோதிக்க, தரனை அந்த கேசங்களில் ஒன்றைப் பிடித்து இழுக்குமாறு ஆணையிட, அவனும் அப்படியே செய்ய, அந்த முடி பறிக்கப்பட்டதோடு,பெருமாளின் தலையிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் தெறித்து மன்னன் மீது விழவும் செய்தது. தன் பக்தனைக் காப்பதற்காக, இறைவன்தான் எப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறான்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் இத்தல இறைவன் சௌரிராஜப் பெருமாள் என்றழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்தின் தாயார், கண்ணபுர நாயகியாகத் தனிக் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறாள். பக்தன் மட்டுமல்ல, பெரிய திருவடி எனப்போற்றப்படும் கருடப் பறவைக்கும் இந்தப் பெருமாள் அனுகிரகித்திருக்கிறார். புராண காலத்தில் மலைகள் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்தன.

இதனால் பூமியில் பல பகுதிகளில் குழப்பமும், அழிவும் ஏற்பட்டதால், அவற்றின் பறக்கும் இயல்பைக் கட்டுப்படுத்த இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டினான். ஆனால் மலையாக இருந்த கருடன் மட்டும் திருக்கண்ணபுரம் தலத்துக்குச் சற்றுத் தொலைவில் கடலிலுக்குள் மறைந்துகொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பித்தது. இவ்வாறு இந்திரனையே ஏமாற்றிய காரணத்தால் செருக்கு கொண்டான் கருடன். அந்த உற்சாகத்தில், திருக்கண்ணபுரம் கோயிலின் மீது ஆரவாரத்துடன் பறக்க ஆரம்பித்தான். இதன் ஆணவத்தைக் கண்டு வெறுப்புற்ற, அந்நகரைக் காவல் புரிந்து வந்த விஷ்வக்சேனரின் படை வீரர்கள், கருடனின் நிழலைப் பற்றி இழுத்து, கருடனையும் அங்கே வீழச் செய்தனர். அங்கே சௌரிராஜப் பெருமாள் எழுந்தருளியிருப்பதை அறியாத வண்ணம் தனக்கு கர்வம் மேலோங்கிவிட்டதை உணர்ந்து அறியாமையால் தான் செய்த பிழையை மன்னித்தருளுமாறு எம்பெருமானிடம் வேண்டி, தவம் மேற்கொண்டான். அவன் மீது இரக்கம் கொண்ட பகவான் அவனுக்குக் காட்சி தந்து, அவனைத் தன் வாகனமாகவே ஆக்கிக்கொண்டார். அதோடு தனது கொடியிலும் அவன் உருவம் விளங்குமாறு செய்தார். இத்தலத்தில் அமைந்துள்ள நித்ய புஷ்கரணியும் புராணச் சிறப்பு கொண்டது. சித்தஸ்ரவஸ் என்பவன் பாண்டிய மன்னன். அவன் தன் குடும்பத்தாருடன் தாமிரவருணி நதியில் நீராடினான். அச்சமயம் திடீரென்று நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவே, மன்னனும் அவனது மகள் உத்தமையும் அடித்துச் செல்லப்பட்டனர்.

விவரம் அறிந்த நாட்டு மக்கள் திகைத்து, வருந்தி நிற்க, அமைச்சர்களின் ஒருவரான சுநீதி, மன்னர் மீண்டு வருவார் என்று கனவு கண்டதாகக் கூறியதும், அகத்திய முனிவர் தன் ஞானதிருஷ்டியால் அதை உறுதிப்படுத்தியதும் மக்களை ஓரளவு நிம்மதி கொள்ளவைத்தன. இதற்கிடையில் கங்கை, யமுனை, தாமிரவருணி முதலான புண்ணிய நதிகள் பிரம்மனிடம், தாங்கள் மக்களின் பாவங்களைச் சுமந்து, சுமந்து நலிவுற்றுப் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்தன. அந்தப் பாவங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை வாங்கித் தருமாறு அவரிடம் இறைஞ்சின. பிரம்மனும், திருக்கண்ணபுரத்திலுள்ள நித்ய புஷ்கரணியில் அவர்கள் நீராடினால் அந்தப் பாவங்களிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி, அந்நதிகள் இந்தத் திருக்குளத்திற்குப் பாய்ந்தோடி வந்தன. அவற்றில் ஒன்றான தாமிரவருணி அப்படி ஓடிவந்தபோது, தன்னுடன் சித்தஸ்ரவஸ் மன்னனையும் அவனது மகள் உத்தமையையும் சேர்த்து அடித்துக்கொண்டு வந்தது! இதனாலேயே பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்ல, அவர்களுடைய புனர்ஜன்ம வாழ்க்கைக்கும் இந்த புஷ்கரணியில் நீராடுதல் வழிவகுக்கும் என்கிறார்கள். இப்போதைய கோயிலை புராண காலத்திலேயே தோற்றுவித்தவன் உபரிசரவசு என்பவன். இவன் இந்திரனின் இனிய நண்பன். ஒரு சமயம், நண்பனின் பொறுப்பில் தன் ஆட்சியைத் தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு, பூவுலகில் பெரியதோர் யாகம் செய்யப் புறப்பட்டுச் சென்றான் இந்திரன். இந்திரன் இல்லாததால், இந்திரலோகத்தின் மீது படையெடுக்க இதுதான் சரியான சமயம் என்றெண்ணிய அசுரர்கள் அதேபோல் போர் தொடுத்தார்கள். ஆனால் அரசுப் பொறுப்பேற்றிருந்த உபரிசரவசு, அவர்களையெல்லாம் எளிதாக வென்று விரட்டியடித்தான்.

இத்தகைய சாதனைக்குத் தனக்குப் பேராதரவாக இருந்த திருமாலை சேவித்துத் தன் நன்றியைத் தெரிவிக்க விரும்பினான் அவன். உடனே பூவுலகிற்கு வந்து திருக்கண்ணபுரத்தை அடைந்தான். அங்கே தினைக்கதிர்கள் விளைந்த ஒரு தோட்டத்தினைக் கண்டான். தினை உண்ண ஆவல் கொண்டு அந்தக் கதிர்களைப் பற்றி இழுத்து உண்ண ஆரம்பித்தான். அப்போது அவன்முன் ஓர் இளைஞன் தோன்றினான். ‘‘நீ தினைக்கதிர் என நினைப்பது ஒரு பயிரல்ல; இவை எல்லாமே முனிவர்கள். நெடிய தவத்தால் உடல் வற்றி, இளைத்து, காய்ந்து போயிருக்கிறார்கள். இவர்களைப் பயிர்கள் என்று நினைத்து உண்ண முற்பட்டது தவறு,’’ என்று எடுத்துக் கூறினான். அதைப் புரிந்து கொள்ளாத உபரிசரவசு, மீண்டும் அந்த ‘தினைக் கதிர்’களைப் பற்றி இழுக்க முயற்சிக்க, இளைஞன் தன் வில்லெடுத்து அவனுடன் போருக்குத் தயாரானான். உடனே வெகுண்ட உபரிசரவசு தன் வில்லிலிருந்து அம்புகளை இளைஞன் மீது அடுத்தடுத்து செலுத்தினான். ஆனால் அந்த அம்புகளெல்லாம் மாலைகளாகி அந்த இளைஞனின் மார்பை அலங்கரித்தன. வியப்பால் விழிகள் விரிய திகைத்து நின்ற உபரிசரவசு உடனே இருகரம் கூப்பி வணங்கினான். சௌரிராஜப் பெருமாள் அவனை அன்புடன் அரவணைத்துக்கொண்டார். தனக்கு அருட்காட்சி அளித்த பெருமாள், பிற அனைவருக்கும் அதே காட்சியினை அருளவேண்டும் என்பதற்காக, அந்த இடத்திலேயே அவன் அவருக்குக் கோயிலை நிர்மாணித்தான். நம்மாழ்வார் (11 பாசுரங்கள்), பெரியாழ்வார் (ஒரு பாசுரம்), ஆண்டாள் (ஒரு பாசுரம்), குலசேகராழ்வார் (10 பாசுரங்கள்), திருமங்கையாழ்வார் (100 பாசுரங்கள்) என்று ஐந்து ஆழ்வார் பெருமக்கள் போற்றித் துதித்த பெருமான் இவர். இல்லையலல் எனக்கேல் இனியென்குறை

அல்லி மாதரமரும்
திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாரவே

-என்கிறார் நம்மாழ்வார். திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே தன் துயர்கள் எல்லாம் வெருண்டோடிவிட்டன என்று சொல்லி மகிழ்கிறார் ஆழ்வார். பெருமாள் இங்கே மும்மூர்த்தி அம்சமாகக் காட்சி அருள்வது குறிப்பிடத்தக்கது. வைகாசி பிரம்மோத்ஸவ விழாவின் 7ம் நாளன்று மஹாவிஷ்ணுவாகவும், இரவில் தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்ட தாமரை மலரின் நடுவே சிருஷ்டி பாவத்தில் பிரம்மனாகவும், விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரத்துக்கு ஸம்ஹார பாவத்தில் சிவனாகவும் தோன்றுகிறார் சௌரிராஜப் பெருமாள். (இந்த முகூர்த்த நேரத்தில் பெருமாளுக்குப் பட்டையாகத் திருநீறு சாற்றுகிறார்கள். பட்டர்கள், வைணவ பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திருநீறு அணிந்துகொள்கிறார்கள். வரும் பக்தர்களுக்கும் திருநீறு வழங்கப்படுகிறது!) இந்தத் தோற்றங்களும், நிகழ்ச்சியும் வேறெந்த திவ்ய தேசத்திலும் காணப்படாதவை என்றே சொல்லலாம்.
கருவறையில் பெருமாளை தரிசிக்கும்போது அவர் நெற்றியில் ஒரு சிறு வடு ஏற்பட்டிருப்பதை பட்டர் காண்பிக்கிறார். அது அரையர் சேவை (பெருமாளின் பாசுரங்களை இசையாகப் பாடியும், நடனமாக ஆடியும் செலுத்தும் பக்தி) புரிந்த ஒரு பக்தரால் ஏற்பட்டதாம். அது என்ன கதை?ஆரம்ப காலத்தில் திருவரங்கத்தைப் போலவே இந்தக் கோயிலிலும் ஏழு மதில் சுவர்கள் இருந்தன.

சோழ மன்னன் ஒருவன், அந்தச் சுவர்களை இடித்து அந்த கற்களைக் கொண்டு வேறொரு கோயில் நிர்மாணித்தான். இதுகண்டு பொறுக்காத அரையர் ஒருவர், ‘உன் கையிலுள்ள சக்கரம் செயலிழந்து போனதேன்?’ என்று கோபமாக திருமாலைப் பார்த்து கேட்டபடி தன் தாளக் கட்டையை அவரை நோக்கி வீசியெறிந்தார். அது பெருமாளின் நெற்றியில் பட்டு காயம் உண்டாக்கியது. உடனே பெருமாள் தன் சக்கரத்தை ஏவி அந்த மன்னனை வதைத்தார். இதனாலேயே இந்தக் கோயிலில் இப்போது ஒரு மதில் சுவர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தான் உடற்காயம் பட்டாலும், தன் பக்தன் மனக்காயம் படக்கூடாது என்ற பரந்தாமனின் பேரருள் சிலிர்க்க வைக்கிறது.இன்னொரு சம்பவம்: முனையதரையர் என்ற பக்தர் பெருமாளுக்கு அரும் சேவை ஆற்றியவர். குறிப்பாக பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யாமல் அவர் உணவு எடுத்துக்கொண்டதேயில்லை. ஒருசமயம், அவர் வெளியூர் போக வேண்டியிருந்தது. அன்று அர்த்தசாம வேளையில், தன் மனைவி தன் வீட்டில் தயாரித்து வைத்திருக்கக்கூடிய பொங்கலை வெளியூரிலிருந்தபடியே மானசீகமாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் முனையதரையர். மறுநாள் கோயிலுக்குச் சென்றவர்கள், கருவறையிலிருந்து வெளிப்பட்ட பொங்கல் நறுமணத்தை நுகர்ந்து வியந்தார்கள்.

அது முனையதரையரின் மானசீக நிவேதனத்துக்குப் பெருமாள் காட்டிய அங்கீகாரம் என்று புரிந்துகொண்டு வியந்து பாராட்டினார்கள். அன்று முதல் இன்றுவரை அர்த்தசாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் திருவாராதனம் செய்கிறார்கள். அந்தப் பொங்கலை, முனையதரையன் பொங்கல் என்றே குறிப்பிடுகிறார்கள். கோயிலுக்குள் துவாரகை கிருஷ்ணன், ராதையுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார். வட இந்திய பாணியில் பளிங்குக் கற்களால. ஆன சிற்பங்கள் இவை. பெருமாள் மீது பாசுரம் பாடிய ஆண்டாளுக்கும் தனி சந்நதி. விபீஷணனுக்கு நடையழகு காட்டிய பெருமாள் ராமராக, சீதை, லட்சுமணனுடன் தனியே மூலவராகவும், உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகளுக்கும் தனித் தனி சந்நதிகள் உள்ளன.எப்படிப் போவது: திருவாரூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. நாகையிலிருந்தும் செல்லலாம் & 25 கி.மீ. திருவாரூர், நாகை, நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணிவரையிலும், மாலை 5 முதல் 9 மணிவரையிலும்.முகவரி: அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் அஞ்சல், நாகப்பட்டினம் வட்டம், நாகை மாவட்டம் – 609704.

தியான ஸ்லோகம்

புண்யே கண்வ புரோத்தமே விலஸதி ஸ்ரீ சௌரிராஜ: ப்ரபு:
தேவி தத்புர நாயகீ கமலிநீ நித்யா பிதா ஸர்வதா
திவ்யே சைவ ததுத் பலாவத ஸமாக் யாதே விமாநேத்புதே
திஷ்டந் பூர்வதிசா வலோகநமுக: கண்வஸ்ய முக்திப்ரத:

 

Related posts

சகல தோஷமும் விலகிட செய்யும் பிள்ளையார் வழிபாடு..!!

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?