ஆற்றுகால் பொங்கல் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறித்த தூத்துக்குடி இளம்பெண்கள் கைது

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபட்டனர். இதனால் தம்பானூர், கிழக்கேகோட்டை, மணக்காடு, கிள்ளிப்பாலம் உள்பட நகரம் முழுவதும் நடப்பதற்குக் கூட இடமில்லாத வகையில் கூட்டம் இருந்தது. ஆகவே திருடர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன.

அதேபோல் பாதுகாப்புக்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொங்கலிட்டு முடிந்தவுடன் மாலையில் பெண்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தம்பானூர் ரயில் நிலையம் அருகே பட்டம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு 2 இளம்பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று 2 பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து செயினை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மீனாட்சி, மாரி என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் 2 பேரையும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது