திருச்சுழி அரசு மருத்துவமனையில் சென்னை ஐடி ஊழியர் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம்: சொத்து பிரச்னையில் உறவினர் வெறிச்செயல்

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (55). அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கருப்பையா (30) சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். கணேசனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் பாலமுருகனுக்கும் (35) சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், கணேசன் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டதில், காயமடைந்த இருவரும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

சென்னையில் இருந்து வந்த கருப்பையா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையை நேற்று காலை சென்று பார்த்தார். அப்போது, அங்கு வந்த பாலமுருகன், சொத்து பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்தார். திடீரென வாக்குவாதம் முற்றி, பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பையாவையும், அவரது தந்தையையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கருப்பையா இறந்தார். கணேசன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்