‘’தியாகராயா அரோகரா’’ பக்தி கோஷத்துடன் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதன்பின்னர் கோயில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன், சந்திரசேகரர்-மனோன்மணிதாயார் ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 41 அடி தேரில் எழுந்தருளினர்.

இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘’தியாகராயா அரோகரா … ஒற்றியூரா, நமச்சிவாய…” என்று பக்தி கோஷங்கள எழுப்பினர். இதன்பின்னர் கலாநிதி வீராசாமி எம்.பி, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, சமத்துவ மக்கள் கழக மாநில மாணவரணி செயலாளர் ஏ.கார்த்திக் நாராயணன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரத நாட்டியம் மற்றும் 108 சங்க நாதம் முழங்க திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 4 மாட வீதிகளை சுற்றிவந்து மீண்டும் தேர் கோயிலை வந்தடைந்தது. ஒவ்வொரு வீடுகளின் அருகில் பக்தர்கள் தேருக்கு தேங்காய், பழம் படைத்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வழிநெடுக நீர், மோர், பழங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாசி திருவிழாவின் 9ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்