முகத்திரை கிழிந்தது

நாடு முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 30 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ.335 கோடி நன்கொடை கொடுத்துள்ளன. இதில் என்ன வியப்பு? சாதாரணமாக அனைத்து நிறுவனங்களும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது சகஜமானது தானே என்று கேட்கலாம். இந்த குறிப்பிட்ட 30 நிறுவனங்களும் வருமான வரி சோதனை மற்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்ட பிறகு, பாஜவுக்கு நன்கொடை அளித்துள்ளன என்பதுதான் ஹைலைட். நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை புரட்டியபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் நன்கொடைகள் பற்றிய ஆவணங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை, யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். பாஜவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி தேர்தல் நன்கொடை மூலம் கிடைத்துள்ளது. பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கிறார்கள். அப்படி பாஜவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் யார், அவர்களது நிறுவனம் மீது வருமான வரி சோதனை அல்லது அமலாக்கத்துறை சோதனை கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்டதா என ஆராய்ந்தால், ரெய்டுக்கு பிறகு பல நிறுவனங்கள் நன்கொடை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் பாஜவுக்கு ரூ.100 கோடி கொடுத்துள்ளது. அதுவும் ரெய்டு நடத்தப்பட்ட பிறகு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. இன்னொரு நிறுவனம் ரூ.11 கோடி கொடுத்துள்ளது. இதே நிறுவனங்கள் மற்ற கட்சிகளுக்கு கொடுத்துள்ளனவா என ஒப்பிட்டு பார்த்தால், இல்லை என்றே ரிசல்ட் வருகிறது.

“முதலில் ரெய்டு… அதன்பின்னர் நன்கொடை…’’ என்ற கொள்கையை கையில் எடுத்து, பாஜ இப்படி கோடி கோடியாக பணம் குவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் பாஜ மட்டுமே இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளது. அதுவும் குறுகிய காலத்தில் பல ஆயிரம் கோடிகளை குவித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவின் நிறுவனம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்து வந்த அவர், பாஜவுக்கு மாறிவிட்டார். இரண்டு ஆண்டுகள் பாஜவில் இருந்தார். அப்போது அந்த நிறுவனம் பாஜவுக்கு ரூ.6 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. அதன்பின்னர் அந்த நிறுவன உரிமையாளர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டார். அடுத்த 20 நாளில் அந்த நிறுவனம் மீது அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள ஒரு கம்பெனி பாஜவுக்கு ரூ.3 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. அந்த முகவரியில் கம்பெனி உள்ளதா என ஆராய்ந்து பார்த்தால், அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என தெரியவந்துள்ளது. இப்படி பாஜவுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை மீதும், அந்த நிறுவனங்கள் மீதும் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. ஆகவேதான், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு அளிக்கப்பட்டுள்ள நன்கொடை செல்லாது, தேர்தல் பத்திரமும் செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் இந்த மலிவான செயல், அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. “நாங்கள் நேர்மையானவர்கள், நம்பிக்கையானவர்கள், நாணயமானவர்கள், லஞ்சத்தை ஒழிப்போம், ஊழலை வேரறுப்போம்…’’ என வீதிக்கு வீதி மார்தட்டும் பாரதிய ஜனதா கட்சியின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது. ஊருக்குத்தான் உபதேசம் என்ற நிலைப்பாடும் வெளியே தெரியவந்துள்ளது. இனி, தீர்ப்பு – மக்கள் கையில்…!

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு