நியாயம் கேட்ட சகோதரி முன்பும் தவறாக நடந்ததால் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து தப்பினர் ஐஸ்கிரீம் வாங்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் போக்சோவில் கைது

சென்னை: மயிலாப்பூரில் ஐஸ்கிரீம் வாங்க வந்த பிளஸ்-1 மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த கடையின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், நியாயம் கேட்க வந்த சகோதரி முன்பும் மீண்டும் தவறாக நடக்க முயன்றதால் இருவரும் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு தப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ராணி(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி 4.30 மணிக்கு பள்ளி முடிந்து, மயிலாப்பூர் நாச்சியப்பா தெருவை ேசர்ந்த மதன்லால்(63) என்பவர் நடத்தும் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து ஐஸ்கிரீம் கேட்டுள்ளார். அப்போது மதன்லால், மாணவிக்கு நல்ல ஐஸ்கிரீம் கொடுப்பதாக கடைக்குள் அழைத்து பாலியல் ரிதியாக தவறாக நடந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி வீட்டிற்கு வந்ததும் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். உடனே மாணவியை அழைத்துக் கொண்டு அவரது சகோதரி மறுநாள் மாலை மீண்டும் ஐஸ்கிரீம் கடைக்கு நியாயம் கேட்க அழைத்து சென்றுள்ளார். பாதுகாப்புக்கு அவர் ‘பெப்பர் ஸ்பிரே’ கையில் எடுத்து சென்றார். கடையில் மதன்லாலிடம் இருவரும் ஐஸ்கிரீம் கேட்டுள்ளனர். அதற்கு மதன்லால் தவறான நோக்கத்துடன் ஐஸ்கிரீம் பெட்டியை இழுத்து திறப்பது போன்று பிளஸ்-1 மாணவியின் தோள்பட்டையில் கையால் இடித்து மீண்டும் தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனே மாணவி மற்றும் அவரது சகோதரி இருவரும் கையில் எடுத்து வந்த பெப்பர் ஸ்பிரேவை கடையின் உரிமையாளர் மதன்லால் முகத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுளள்னர். பிறகு நடந்த சம்பவத்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இருவரும் தகவல் அளித்தனர். அதன்படி மயிலாப்பூர் உதவி ஆய்வாளர் அகிலன்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஐஸ்கிரீம் கடை உரிமையாளரை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் மாணவியின் தாய் ராணி அளித்த புகாரின் படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் மதன்லால் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு