வாக்களிப்பின் ரகசியத்தை காத்த காலமெல்லாம் மலையேறி போச்சு… இளசுகள் அலப்பறைகளும்… ஒரு விரல் புரட்சியும்… காற்றில் பறந்த செல்போன் தடை உத்தரவு

தமிழ்நாடு, புதுச்சேரி, உ.பி., மேற்குவங்கம் உள்பட 21 மாநிலங்களில் 102 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில், 69.72 சதவீத வாக்குகள் பதிவானது. முக்கிய கட்சிகளாக திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜ கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் கண்டுள்ளன. வாக்குப்பதிவு நாளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் அமர்ந்திருந்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.

வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் தங்களின் வாக்குகளை வாக்காளர்கள் செலுத்தினர். இப்படி வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளரும், தங்களது வாக்கு யாருக்கு வழங்கப்பட்டது என்பதை ரகசியமாக வைத்துக்கொள்வார்கள். யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வெளிப்படையாக கூறமாட்டார்கள். இப்படி வாக்களிப்பின் ரகசியத்தை வாக்காளர்கள் காப்பாற்றி வந்த காலம் எல்லாம் தற்போது மலையேறி போச்சு என்று சொல்லும் அளவிற்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது அதிகரித்துள்ளது.

19ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்திற்கு நேர் உள்ள பட்டனை அழுத்தி வாக்குப்பதிவு செய்வதையும், அந்த சின்னம் விவி பாட் இயந்திரத்தில் வருவதையும் வீடியோவாக எடுத்து இளசுகள் வெளியிட்டுள்ளனர். இதனால், எல்லா சமூக வலைதளங்களும் நிரம்பி வழிகிறது. மேலும், பிடிக்காத சின்னத்தின் நேருக்கு கை விரலை வைத்துக்கொண்டு, நான் எப்படி அதற்கு ஓட்டுப்போடுவேன் என செய்கை செய்வதும், பிறகு விரும்பிய சின்னத்திற்கு வாக்களிப்பது போன்ற வீடியோக்களும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்த வாக்களிப்பு வீடியோக்களுடன் சினிமா பாடல்கள் மற்றும் கட்சி பாடல்களையும் சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்பி, எங்களது வெற்றி உறுதியாகிவிட்டது என சிலர் கூறிவருகின்றனர். ஒரு சிலரோ, நான் உங்களுக்கு தான் வாக்களித்தேன், அதற்கு ஆதாரம் இதோ என வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி அலப்பறைகள் செய்கின்றனர். வாக்களிப்பின் ரகசியத்தை காக்க வேண்டும் என்பதற்காகவே மின்னணு வாக்கு இயந்திரங்களை மறைவான இடத்தில் வைத்து, வாக்காளர்களை வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது. அத்துடன் நிற்காமல், வாக்களிப்பின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என வாக்காளர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

இதனை உறுதிபடுத்துவதற்காக வாக்குச்சாவடிக்குள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்ற தடை உத்தரவும் அமலில் இருக்கிறது. இப்படி செல்போன் தடை அமலில் இருக்கும் நிலையில், அந்த உத்தரவை தேர்தல் அலுவலர்கள் சரியாக பின்பற்றவில்லை. இதன்காரணமாகவே பெரும்பாலான வாக்காளர்கள், வாக்களிக்கும் போது செல்போனை எடுத்துச் சென்று வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அதனால், வரும் தேர்தலிலாவது செல்போன் தடை உத்தரவை கடுமையாக தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ஆதாரத்தை காட்டி பணம் பெறுவதாக குற்றச்சாட்டு
யாருக்கு வாக்களித்தோம் என்பதை வீடியோவாக பதிவு செய்யும் சிலர், அதனை குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது அவரை சார்ந்தோருக்கு அனுப்பி வைத்து ஓட்டுக்கு பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், பெரும்பாலான இளசுகள், சமூகவலைதளங்களில் லைக்குகளை அள்ளவும், எந்த கட்சியை சார்ந்தவன் என காட்டிக்கொள்ளவும் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். எப்படி இருப்பினும் வாக்களிப்பின் ரகசியம் என்பது காலத்திற்கும் இருக்க வேண்டியது என்கின்றனர் மூத்த வாக்காளர்கள்.

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு