அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான 6 அனல் மின் நிலையங்களின் மொத்த மின் நிறுவு திறன் 4,750 மெகாவாட்டாக உள்ளது. அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், உடன்குடி மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அதிக அளவு தேவைப்படுகிறது. இதற்காக, புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழக மின்சார வாரியம் வாங்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள சகிகோபால் ககுர்க்கி என்ற புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழக மின்வாரியம் அடுத்த மாதம் வாங்குகிறது. 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தச் சுரங்கத்தில் 4,500 டன் முதல் 5,200 டன் அளவு வரையிலான நிலக்கரி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 103 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியமும் பங்கேற்றது. குறிப்பாக, சகிகோபால் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்க மின்வாரியம் விண்ணப்பித்தது. இந்த ஏலத்தில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த எந்த மின் நிறுவனமும் பங்கேற்காததால், விதிப்படி இந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் மீண்டும் பங்கேற்றது. ஆனால், இந்த ஏலத்திலும் வேறு எந்த மாநில மின்நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. எனினும், ஏல விதிப்படி 2வது முறை விடப்படும் ஏலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவில்லை எனில், ஏலத்தில் பங்கேற்ற அந்த ஒரு நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக மின் வாரியத்தில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்காக இந்த சுரங்கத்தை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய நிலக்கரித் துறையும் பணிகளை விரைவுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின்வது வாரத்தில் சுரங்கங்கள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக ஒடிசாவில் உள்ள சந்திரபிலா சுரங்கத்தை தமிழ்நாடு மின் வாரியம் கைவிட்டது. சந்திரபிலா சுரங்கத்தை கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய நிலக்கரித் துறையிடம் இருந்து ஏலம் மூலம் மின் வாரியம் பெற்றது. ஆனால் தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை பெற தவறியதாலும், நிலக்கரி எடுப்பதற்கான நடைமுறைகளை சரியாக நடத்தப்படாததால் சுரங்கத்தை கைவிடும் முடிவு எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார்..!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி