சலுகையே இல்ல… ஏமாத்திட்டாங்கய்யா, ஏமாத்திட்டாங்க

* மலிவு விலை வீடு சாத்தியமா?
அடுத்த 5 ஆண்டுக்குள் மேலும் 2 கோடி பேருக்கு மலிவு விலை வீடு கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், வீடுகள் விலை உச்சத்துக்குச் சென்றுள்ள நிலையில், மலிவு விலை வீடுகள், அதாவது நடுத்தர மக்கள்வாங்கும் வகையிலான வீடுகள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர். சென்னை, மும்பை, டெல்லி ,பெங்களூரு உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் இந்த வகை வீடுகள் 18 சதவீதமாகக் குறைந்து விட்டன. ரியல்எஸ்டேட் துறையை ஊக்குவிக்காதவரை இத்தகைய வீடுகள் விற்பனையும், எண்ணிக்கை அதிகரிப்பும் எப்படி சாத்தியமாகும் என ரியல் எஸ்டேட் துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

* ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்பில் விழுந்தது மண்
ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து மந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒன்றிய அரசு, இந்த துறையை ஊக்குவிக்க வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறித்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வீட்டுக்கடன் வட்டி செலுத்துவோர், பிரிவு 24பி-யின் படி ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை பெறுகின்றனர். ஒன்றிய பாஜ அரசு முதன் முதலாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 2014ம் ஆண்டில் இருந்தே இந்த வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 10 ஆண்டு ஆட்சி முடிவுறும் நிலையிலாவது இதன் மூலம் வரிச்சலுகை பெற வழி கிடைக்கும. ரூ.5 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வட்டிக்காவது வரிச்சலுகை பெறலாம் என நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

* ஓட்டல் துறைக்கு ஏமாற்றம்
ஓட்டல் அறைகளுக்கு நாள் ஒன்றுக்கு அறை வாடகை ரூ.7,500க்கு மேல் இருந்தால் 18% ஜிஎஸ்டியும், ரூ.7,500க்கு கீழ் 12 சதவீத ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. இது ஓட்டல்களின் லாபத்தை குறைத்து விடுவதோடு, குறைந்த கட்டணத்தில் அறை வாடகை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் முடக்கி விடுகிறது. ஆனால், பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

* சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை
சிறுசேமிப்பு என்பதே வழக்கத்தில் இல்லாத ஒன்றாக மாறி விட்டது. காரணம், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைவாக இருப்பதுதான். குறிப்பாக, அஞ்சலக திட்டங்கள் ஒரு காலத்தில் முதலீட்டுக்கான கவர்ச்சித் திட்டங்களாக இருந்தன. ஆனால், ஒன்றிய பாஜ அரசு வந்ததில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்து விட்டன. இதனால் சிறுசேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது குறைந்து வருகிறது. பட்ஜெட்டிலும் சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை.

* கடன் வட்டி குறைய வழியில்லை
வீட்டுக் கடன் போல, தனிநபர், வாகன கடன்கள் பல குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பண வீக்கத்தைக் குறைப்பதற்காக வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி தயக்கம் காட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பண வீக்கம் குறைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு கடன் வட்டி குறைப்புக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

* விவசாய கடன் தள்ளுபடி இல்லை
வேளாண் துறைதான் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் இத்துறைக்குப் பாதகமாக உள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விளைவித்த பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் அவர்கள் தவிக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இன்னும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பாவது வரும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த எந்த அறிவிப்பும் வராதது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!