மாயாற்றின் குறுக்கே ரூ.2 கோடியில் தெப்பக்காடு பாலம் பணி நிறைவு

கூடலூர் : கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசனகுடி வழியாக ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த புதிய பாலம் அமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்தி மசனகுடி மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த ஆற்றின் மீது ஏற்கனவே இருந்த நூற்றாண்டு பழமையான பாலம் பலமிழந்து வந்ததாலும் குறுகியதாக இருந்ததாலும் வாகனங்கள் செல்லும் போது அதில் பயணிகள் நடந்த செல்ல முடியாத நிலை இருந்தது.

அதனை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்காண டெண்டர் கடந்த 2019 ம் ஆண்டு விடப்பட்டது. பாலத்தின் பணிகளின் போது இந்த சாலை போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தெப்பக்காடு ஓய்வு விடுதிகள் வழியாக செல்லும் வனத்துறையின் சாலை தற்காலிகமாக போக்குவரத்திற்கு மாற்றுப்பாதையாக திறந்து விடப்பட்ட அதில் வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய பாலம் அமைப்பு பணிகள் மற்றும் தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளுக்கும் இணைந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் மாயாற்றின் மீது 40 மீட்டர் நீளமும் 5.5 மீட்டர் அகலமும் கொண்ட புதிய பாலத்தின் பணிகள் பல்வேறு காரணங்களால் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள யானை முகாமிற்கு சென்று வருவதால் பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்காக நடை பாதையுடன் கூடிய இந்த பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி சாலை 4.5 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் இருபுறமும் பொதுமக்கள் நடந்த சென்று வர நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் பாலத்தின் பணிகள் துவங்கி பணிகள் மெதுவாகவே நடைபெற்று வந்தது. தொடர் மழை காலங்களில் பாலத்தின் பணிகள் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. பாலத்திற்காக ஆற்றின் இரு கரைகளில் இருந்தும் மத்தியில் இருந்தும் மூன்று தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பாலத்திற்கான மேல் தளம் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் இருபுறமும் இணைப்பு வேலைகள் முடிவடைந்து விரைவில் இந்த பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!