வாழவைக்கும் வாணியம்பாடி தென்னை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீர் சற்று உப்புத்தன்மை மிகுந்தது. இத்தகைய நீரைக்கொண்டும் இங்குள்ள விவசாயிகள் சிறப்பாக விவசாயம் பார்க்கிறார்கள். அதிலும் இந்தப் பகுதியில் தென்னை விவசாயம் செழிப்பாகவே இருக்கிறது. வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் என்ற விவசாயியும் தனக்குச் சொந்தமான குறைந்த அளவு நிலத்தில் தென்னை சாகுபடியை கலக்கலாக செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். தனது தென்னை சாகுபடி அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.“எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறேன். ஆனாலும் விவசாயம் பார்ப்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். பாலாற்றுப் பகுதி அருகே எனக்கென்று சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் நிலக்கடலை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கிறேன். இதில் முக்கால் ஏக்கரில் நிலக்கடலையும், ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னையும் வைத்திருக்கிறேன். தென்னையை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தை 4 முறை உழவு ஓட்டித்தான் நடவு செய்தேன். நான் எடுத்து வைத்திருந்த நாட்டு ரக தென்னங்கன்றுகளையே நடவுக்கு பயன்படுத்திக் கொண்டேன். அதனால் செலவு செய்து வெளியில் இருந்து தென்னங்கன்றுகளை நான் வாங்கவில்லை.

தென்னங்கன்றுகளை நடவு செய்வதற்கு முதலில் இரண்டரை அடி அகலம், இரண்டரை அடி நீளம், 3 அடி ஆழம் கொண்ட குழிகளை எடுத்தேன். ஒவ்வொரு குழிக்கும் 20 அடி இடைவெளி விட்டு 75 குழிகளைத் தோண்டினேன். பின்னர் அந்தக் குழிகளில் 1 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஆற்று மணல், மக்கிய மரச்சருகுகள், கால்நடைகளின் கழிவுகள் அடங்கிய எரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கி எடுத்துக்கொண்டு குழியின் முக்கால் பாகம் நிரப்பி அதில் தண்ணீர் விட்டு நன்கு ஊறவிட்டேன்.பின்பு தென்னங்கன்றில் உள்ள தேங்காயின் அளவைப் பொறுத்து நடவு செய்தேன். அவ்வாறாக நடவு செய்யும் தென்னங்கன்றுகளை தேங்காய் மூடும் அளவுக்கு மட்டும் மண்ணை சரிசெய்ய வேண்டும். தேங்காயின் தண்டுகளுக்கு மண்ணை ஏற்றக்கூடாது. அவ்வாறு மண் ஏற்றினால் மரத்தின் வளர்ச்சியில் கால தாமதம் ஏற்படும். தென்னங்கன்றைச் சுற்றி 3 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் ஆழம்கொண்ட பாத்திகள் அமைத்து அதில் இயற்கையான கால்நடைகளின் எருவைச் சேர்த்து ஈரப்பதத்திற்கு ஏற்றவாறு தேவையான அளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காலநிலையைப் பொறுத்து கிணற்றில் தண்ணீர் ஊறும். அதனால் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு வாரத்திற்கு ஒருமுறையும்,

தட்டுப்பாடு இருந்தால் 10லிருந்து 12 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவேன். மாதம் ஒரு முறையாவது தென்னங்கன்றுகளைச் சுற்றி களை எடுப்பேன். எடுத்த களைகளை மக்கவைத்து மீண்டும் அதையே தென்னைக்கு உரமாக கொடுப்பேன். தென்னங்கன்றுகள் வளரும் சமயத்தில் செரகு நோய் தாக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தென்னைமரங்களுக்கு பெரிய சேதம் ஏற்படாது. மழை பெய்தாலே சரியாகிவிடும். ஆகையால் பெரிதாக பயப்படத் தேவையில்லை. நாம் நடவு செய்யும் தென்னங்கன்றுகளின் வகைகளைப் பொறுத்து 30லிருந்து 35 மாதம் கழித்து தென்னங்கன்றுகள் பெரியதாகி மரங்களாக வளர்ந்து மகசூலுக்கு தயாராகும். தென்னை மரங்களைப் பொறுத்தவரை தண்ணீர் பாய்ச்சல் மற்றும் உரங்களை பொறுத்துதான் மகசூல் தரும். அதாவது வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சும் நாட்டு தென்னைமரம் ஒன்றில் ஆண்டுக்கு 200 முதல் 250 தேங்காய்களும், அதுவே குட்டை ரகம் (ஹைப்ரிட்) என்றால் ஆண்டுக்கு 300ல் இருந்து 350 தேங்காய்கள் கிடைக்கும். குட்டை ரக தென்னையை விட நாட்டு ரக தென்னைக்கு ஆயுள் அதிகம். பராமரிப்பும் குறைவு.

அதேபோல் வருடத்திற்கு 2 முறை தென்னை மரங்களுக்கு இயற்கை உரங்கள் அல்லது உரக்கடைகளில் கிடைக்கும் யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களை இட்டு பராமரிப்பேன். நடவு செய்த ஆறாவது வருடத்தில் மரத்தில் இருந்து நல்ல மகசூல் கிடைக்கும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மரங்களில் காய்களின் எண்ணிக்கைகள் குறைய வாய்ப்புகள் அதிகம். தென்னை மரங்களில் 2 மாதத்திற்கு ஒருமுறை தேங்காய் அறுவடை செய்யலாம். அவ்வாறாக 75 தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்கள் மூலம் தோராயமாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். இதில் மரம் ஏறுபவருக்கு கூலி மற்றும் தேங்காய்களை ஒன்று சேர்த்து வாகனத்தில் ஏற்றும் ஆட்களின் கூலி, மண்டிக்கு எடுத்துச் சொல்ல வாகனத்தின் வாடகை என்று ரூ.4 ஆயிரம் செலவாகிறது. இது போக மீதி ரூ.21 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு ஆறு முறை தென்னை மரங்களில் அறுவடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு தோராயமாக ரூ.1.25 லட்சம் லாபமாக கிடைக்கிறது.

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் எங்களைப் போன்ற விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் தேங்காய்களை மண்டிகளில் சேகரித்து, தேங்காய் மட்டைகளை உரித்து, பெரிய சாக்குப்பைகளில் மூட்டை கட்டி, லாரிகளில் மும்பை, குஜராத், பூனா போன்ற வெளி மாநில நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்படும் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி தேங்காய்களுக்கு வெளிமாநிலத்தில் வரவேற்பு அதிகம். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.தென்னை பராமரிப்பைப் பொறுத்த வரையில் மற்ற பயிர்களைப் போல் தினமும் நிலங்களுக்குச் சென்று பார்வையிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட ஆண்டுகளில் மகசூலுக்குத் தயாராகிவிடும். தென்னை மரங்களுக்கு தண்ணீர் இருந்தால் சரிதான். ரசாயன உரங்கள் அவ்வளவாக தேவைப்படாது.

இதனால் இதனுடைய பராமரிப்புச் செலவு என்பது மிகவும் குறைவானது. ஆகையால் விவசாயம் செய்ய முடியாத நிலங்களில் தென்னங்கன்றுகளை நடவு செய்து லாபத்தை ஈட்டலாம். இதுபோக 75 சென்ட் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்திருக்கிறேன். நிலக்கடலையை நடவு செய்து 1 மாதம் ஆகிறது. வேர்க்கடலையைப் பொறுத்தவரையில் அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட பயிர்களில் ஒன்று. விதைப்பதற்கு முன்பு மண்ணை கட்டிகள் இல்லாமலும், இறுக்கம் இல்லாமலும் தயார் செய்துகொள்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை சீரான வகையில் தண்ணீர் விடுவோம். வேர்க்கடலைக்கு பொதுவாக அதிக பராமரிப்பு தேவைப்படாது. நடவு செய்த மூன்றாவது மாதத்தில் செடிகள் அனைத்தும் அறுவடைக்குத் தயாராகிவிடும். கடந்த முறை அறுவடையில் 75 சென்ட் நிலத்தில் இருந்து எனக்கு 30 மூட்டை நிலக்கடலை கிடைத்தது. ஒரு மூட்டை என்பது 40 கிலோ எடை கொண்டது. நாங்கள் ஒரு கிலோ நிலக்கடலையை ரூ.40 என விற்பனை செய்கிறோம். இதன்மூலம் ஒரு போகத்திற்கு எங்களுக்கு ரூ.48 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.10 ஆயிரம் போக ரூ.38 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது” என்கிறார்.

தொடர்புக்கு:
நீலமேகன்: 93606 68485.

தென்னங்கன்றுகள்பராமரிக்கும் முறை

தென்னைமரத்தின் குருத்துகளைக் கடிக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த உரக்கடைகளில் விற்கப்படும் மானோகுரோட்டோபாஸ், குளோரோ குரோட்டோபாஸ், சைட்டோ மீத்தேன் ஆகிய மருந்துகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி வீதம் சேர்த்து தென்னையின் குருத்துப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை என 3 முறை ஊற்றி விட வேண்டும். அவ்வாறு செய்தால் காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்தப்படும். அதேபோல் அழுகல் நோய்க்கு பைட்டோலான்-காப்பர் ஆக்சி குளோரைடு ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி கலந்து மரத்திற்கு ஸ்பிரே செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 

Related posts

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் பலி

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்