தேனிக்காரரின் ஆதரவாளர்கள் தன்னிடம் வாலாட்டாம இருக்க இலைக்கட்சி தலைவர் வைத்துள்ள திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோளாறுகளை சரி செய்ய முடியாத அளவுக்கு மின் கம்பத்துல விளம்பர பாக்ஸ்களை கட்டியதால மின்வாரிய ஊழியர்கள் கொந்தளிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர்பத்தூர் மாவட்டத்துல, மிஸ்டர் பத்தூர், ரயில் வந்து போற பேட்டை ஊர், பிரியாணி ஊர், வாணி பாடிய ஊர்னு மாவட்டத்துல எல்லா இடங்கள்லயும் வேலையே செய்ய முடியலைன்னு மின்வாரியத்துல இருக்குற போர்மேன்கள் புலம்பி வர்றாங்களாம்.. ஏன்னா…

அந்த ஏரியாவுல இருக்குற மின்கம்பங்கள்ல விளம்பர பேனல் பாக்ஸ்கள், நெட் கம்பெனி பாக்ஸ்கள், விளம்பர பதாகைகள்னு அதிகளவுல கட்டி வெச்சிருக்குறாங்களாம்.. மின்கோளாறுகளை சரிசெய்ய மின்கம்பங்கள்ல ஏறும்போதும், மழை காலங்கள்லயும் மின் கசிவு ஏற்பட்டால் ஷாக் அடிச்சு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குதாம்.. ஆனா, இதுக்கு காரணம் அந்த டிபார்ட்மெண்ட்ல இருக்குற சில அதிகாரிகள் தான்னு புகார் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குதாம்.. இதனால மாவட்ட நிர்வாகம் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு அந்த துறையில இருந்து கோரிக்கையும் வந்திருக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நில அபகரிப்பு வழக்கில் சிக்கி உள்ள மாஜியின் இடத்தை பிடிக்க திறைமறைவில் போட்டா போட்டி போடுறாங்களாமே நிர்வாகிங்க..’’ என அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர், நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருந்து வருகிறாரு.. அவரோட இடத்தை பிடிப்பதற்காக மூத்த நிர்வாகிகள் சிலர், அவருக்கு தெரியாமலேயே மேலிடம் மூலம் காய் நகர்த்திக்கிட்டு வர்றாங்களாம்..

அதற்கான வேலைகளும் திரைமறைவில் தற்போது நடந்துக்கிட்டு இருக்காம்… இந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்ததால் அதிர்ச்சிக்குள்ளான மாஜியானவர், கூடவே இருந்து கொண்டு தன்னுடைய இடத்தை பிடிக்க அவர்களுக்குள்ள போட்டிப் போட்டு கொள்கிறார்களேன்னு நெருங்கிய ஆதரவாளர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டிருக்காரு.. தற்போது, இந்த டாப்பிக் தான் கட்சிக்குள்ளே பரபரப்பா பேசப்பட்டு வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெண்டர் எடுத்தவரை தவிக்கவிட்டுவிட்டு, வாய்வழி உத்தரவால் உள்ளே நுழைந்தவரால் கரன்சியை வாரி இறைக்கிறாராமே பெண் அதிகாரி ஒருத்தர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில், மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு, மாடு அறுவை மனை செயல்படுகிறது. இது, மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த டெண்டரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தி எடுத்தாராம்.. ஆனால், அவருக்கு மாநகராட்சி சார்பில் `ஒர்க் ஆர்டர்’ வழங்கப்படவில்லையாம்.. இதனால், அவர், கடந்த ஓராண்டு காலமாக பணியை தொடர முடியாமல் உள்ளாராம்..

ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையும் கடந்த ஓராண்டாக மாநகராட்சி வசம் அப்படியே இருக்காம்.. இதற்கிடையில், வேறு ஒரு நபருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சிலர், சத்தம் இல்லாமல் மறைமுகமாக, வாய்வழியாக ஒர்க் ஆர்டர் வழங்கி இருக்காங்க.. அந்த நபர், அதிரடியாக உள்ளே இறங்கி, ஜரூராக வேலை செய்து வருகிறாராம்.. சத்தமே இல்லாம கரன்சி குவித்து வருகிறாராம்.. ஆனால், முறைப்படி பணம் செலுத்தி, டெண்டர் எடுத்த நபர், வெளியே தவியாய் தவிக்கிறாராம்..

சட்டத்துக்கு புறம்பாக உள்ளே நுழைந்த நபர், கிழக்கு மண்டலத்தில் உள்ள சில பெண் அதிகாரிகளுக்கு கரன்சியை வாரி இறைத்துவிட்டாராம்.. அதனால், இவருக்கு பச்சைக்கொடி நீள்கிறது. இப்படி வாங்கிக் குவித்த மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள பெண் அதிகாரிகள் கோலோச்சி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சி தேர்தலை நடத்தி மீண்டும் அரியணையில் ஏற இலைக்கட்சி தலைவர் போட்டிருக்கிற திட்டம்பற்றி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் நாலாண்டு காலத்தில் அவரது மந்திரி சபையில் இருந்தவர்களும் எம்எல்ஏக்களும் தங்களது விருப்பம் போல வாழ்ந்துகொள்ளும் வகையில் அனுமதி வழங்கினாராம்.. அந்தந்த தொகுதியில் நடக்கும் வேலைகளுக்கான கமிஷனை அவர்களே வைத்துக்கொள்ளலாம், இடமாறுதலில் கிடைக்கும் கரன்சி எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக்கொள்ளலாம்னு அனுமதி வழங்கி, எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக ஆட்சியை நடத்திட்டாராம்…

சின்னமம்மி காலத்தில் மண்டலம் வாரியாக ஆட்களை வைத்து வசூலிப்பது நிறுத்தப்பட்டதால் ரொம்பவே சந்தோசம் அடைஞ்சாங்களாம்… இவ்வளவு வசதியை செய்து கொடுத்து தலை நிமிர்ந்து வாழவச்சேன், ஆனால் தேனிக்காரரையும், சின்ன மம்மியையும் கட்சியில சேர்க்கச் சொல்றாங்களேன்னு ரெண்டாங்கட்ட தலைவர்கள் மீது ரொம்பவே வருத்தத்தில் இருக்காராம்… ஆனாலும் கட்சியில் நானே ராஜா என்பதை நிரூபிக்கும் வகையில் கிளைக்கழக தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்காராம் இலைக்கட்சி தலைவர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து விளக்கத்தை கேட்டும், ஆலோசனையும் வழங்கி வருகிறார். இதன்பின்னர் ஆகஸ்ட் முடிவில் கிளைக்கழகத்தில் தொடங்கி பொதுச்செயலாளர் வரையிலான தேர்தலை நடத்திடவும் முடிவு செஞ்சிருக்காராம்.. இதில் முற்றிலும் தனது ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்க திட்டமிட்டிருக்காராம்…

பொதுச்செயலாளர் என்ற அரியணையில் ஏறிய பிறகு தேனிக்காரரை கட்சியில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இருக்காராம்… இப்படி செய்வதன் மூலம் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் எந்த வகையிலும் தன்னிடம் வாலாட்ட முடியாது என்பதுதான் அவரது திட்டமாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது