தேனீ வளர்ப்பில் தித்திக்கும் லாபம்!

கல்லூரிப் படிப்பை முடிக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர், அடுத்து என்ன படிக்கலாம்? எந்த வேலைக்குச் சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். நினைப்பதோடு மட்டுமல்லாமல் பெருநகரங்களை நோக்கி தங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கான வண்டியை ஸ்டார்ட் செய்துவிடுவார்கள். நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற இளைஞர், வேளாண்மையைப் பாடமாக படித்துவிட்டு, தனது சொந்த கிராமத்திலேயே தேனீ வளர்ப்புத் தொழிலில் இறங்கி இருக்கிறார். அதில் தற்போது மாதம் ரூ.80 ஆயிரம் என ஒரு மாபெரும் தொகையை லாபமாகப் பார்த்து வருகிறார். களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் என்ற கிராமத்தில் இருக்கிறது இசக்கிமுத்துவின் எழிலார்ந்த தோட்டம். ஒரு காலைப்பொழுதில் அங்கு சென்ற நம்மை புன்னகையோடு வரவேற்று பேச ஆரம்பித்தார் இசக்கிமுத்து.

`விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டது. இதனால்தான் புளியங்குடி அல்அமீன் வேளாண்மைக் கல்லூரியில் 2 ஆண்டு விவசாயப் பட்டயப் படிப்பைப் படித்தேன். படிக்கும்போதே தேனீ வளர்ப்பின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. விவசாயத் தொழிலின் ஓர் அங்கமாக இருக்கும் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாமென நினைத்து, 45 நாட்கள் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்துகொண்டு மத்திய அரசின் எசிஎபிசி சான்றிதழைப் பெற்றேன். அதன்பிறகு தேனீ வளர்ப்பில் இறங்கலாம் என முடிவு செய்தேன். எங்களது குடும்பம் விவசாயக் குடும்பமாக இருந்தாலும் தேனீ வளர்ப்பைப் பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது. என்னை இந்தத் தொழிலை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். அதையும் மீறி முறைப்படி தேனீ வளர்ப்பு குறித்து தெரிந்துகொண்டு, தேனீ வளர்க்கத் தொடங்கினேன். இப்போது 4 ஆண்டு களாக தேனீ வளர்ப்பில் வெற்றிகரமாக செயல்படுகிறேன்.

“கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேனீ வளர்ப்பை முதல்முறையாக தொடங்கினேன். அப்போது தேனீ வளர்ப்பு குறித்து அறிந்து இருந்தேனே தவிர, போதிய அனுபவம் இல்லை. இதனால் 2, 3 பெட்டிகளில் உள்ள தேனீக்கள் பறந்துவிட்டன. நாம் எவ்வளவு செலவு செய்து வளர்த்தாலும் தேனீக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பறந்துவிடும். சரியான பராமரிப்பு இல்லாததாலே தேனீக்கள் வேறு இடங்களுக்கு செல்கின்றன என்பதை பிறகுதான் அறிந்து கொண்டேன். அதன்பின் கேரள மாநிலம், கோட்டயத்தில் எபினேசர் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரது தேனீ வளர்ப்புப் பண்ணையில் 6 மாதங்கள் தங்கி தேனீக்களை எப்படி வளர்ப்பது? எப்படி பராமரிப்பது? என அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகுதான் தேனீ வளர்ப்பு எனக்கு கைகூடியது. பிறகு, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 35 தேனீ வளர்க்கும் பெட்டிகளை வாங்கி வந்து தேனீ வளர்ப்பைத் தொடங்கினேன். தேனீக்களின் இயல்பே கொட்டக் கூடியதுதான். தேனீக்கள் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்தால் மட்டும்தான் மற்றவர்களைக் கொட்டும். ஆனால் அது கொட்டும் என்பதாலேயே பலருக்கும் பயம் இருக்கிறது. அந்த பயத்தால் பெட்டியில் உள்ள தேனீக்களின் அடுக்குகளை எடுக்கும்போது பக்கவாட்டில் உரசிவிட வாய்ப்பு அதிகம். அந்த நேரத்தில் தமக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதாக நினைத்து தேனீக்கள் அருகில் இருப்பவர்களை கொட்டத்தான் செய்யும். நானும் பல கொட்டுக்களை வாங்கி இருக்கிறேன்.

பயத்தை விட்டவுடன் நிதானம் வந்தது. நிதானத்தோடு தேனீ அடுக்குகளை எடுக்கும்போது அவற்றுக்கும் தொந்தரவு இருக்காது. தேனீக்கள் சுமார் 3 கி.மீ., சுற்றளவில் உள்ள தாவரங்களின் பூக்களில் இருந்து தேனை எடுக்கும். அதுதான் தேனீ வளர்ப்பில் நமக்கு உண்டான சாதகம். அதுவாகவே வளர்ந்துவிடும். ஆடு, மாடு, கோழி என எதை வளர்த்தாலும் அவற்றுக்கான தீவனம், இரை, மருத்துவச் செலவு என ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டும். ஆனால் இதில் நாம் செய்ய வேண்டியது அதற்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும்தான். தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை எடுக்க எறும்புகள் உட்பட பல்வேறு பூச்சிகள் வரும். அவற்றை வராமல் தடுக்க தேனீ வளர்ப்புப் பெட்டிக்கு ஒரு ஸ்டேண்ட் அமைத்து, அதில் எறும்புகள் வரமுடியாத அளவிற்கு கிரீஸ் உள்ளிட்ட வழுவழுப்பான பொருட்களைத் தடவ வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை தேனீப் பெட்டிகள் அனைத்தையும் பார்வையிட்டு பராமரிக்க வேண்டும். பராமரிப்புச் செலவு என்பது மிகவும் குறைவு. ஆரம்பத்தில் தேனீப்பெட்டிக்களை வாங்கும்போதுதான் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும்.

அடுத்ததாக நேரடியாக வெயில் படும் இடங்களில் தேனீக்களை வளர்க்கக் கூடாது. நாம் வளர்க்கும் இந்தத் தேனீக்கள் இருளில் காற்றோட்டமான பகுதிகளில் நன்கு வளரும். இதனால் தேனீக்கள் உள்ள ஒரு பெட்டி, அதற்கு மேல் அவற்றை மூடுவதற்கு ஒரு பெட்டி தேவைப்படும். இந்த பெட்டிகளை ஆரம்பத்தில் நான் கேரளாவில் இருந்து வாங்கினேன். இப்போது நானே தயாரித்து விற்பனையும் செய்கிறேன். ஒரு தேனீ வளர்ப்புப் பெட்டி ரூ.2300க்கு விற்பனை செய்கிறேன்.தேனீக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுவதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகிறது. விவசாய நிலங்களில் இந்த தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்தால் தேனீக்கள் அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு மகசூலைப் பெருக்க வழிவகுக்கும். இதனால் எங்கள் பகுதியில் பல விவசாயிகளிடம் பேசி அவர்களின் நிலத்தில் எங்கள் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை அமைத்து இருக்கிறோம்.

மலையடிபுதூர், மாவடி என களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 200 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் உள்ளன. மேலும் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை அமைத்து தொழிலை விரிவாக்கம் செய்திருக்கிறேன். சராசரியாக ஒரு நாளைக்கு 20 கிலோ தேனை விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ தேன் ரூ.600க்கு விற்பதால் தினசரி ரூ.12000 ரூபாய் வருமானம் வரும். ஊழியர்களுக்கான சம்பளம், மார்க்கெட்டிங் செலவு எல்லாம் போக குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் லாபமாகக் கிடைக்கிறது. ரூ.90 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பித்த தொழில் இன்று ரூ.23 லட்சம் மூலதனம் கொண்ட தொழிலாக மாறி இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை தேன் பாட்டில்களை சந்தைப் படுத்த எப்போதுமே நான் நேரடி விற்பனையைத்தான் நம்புகிறேன். நேரடியாக மக்களிடம் தேன் பாட்டில்களை சேர்த்தால் மட்டுமே உடனடியாக நாம் போட்ட பணத்தை எடுக்க முடியும். கடைகளில் கொடுத்தால் அடிமாட்டு விலைக்குக் கேட்பார்கள். பணமும் உடனடியாக வராது. விற்றவுடன் தருகிறேன் என்பார்கள். அந்த நடைமுறை இப்போதைக்கு நமக்கு சரிப்பட்டு வராது. ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் கொடுக்கிறார்கள். நாங்கள் ெடலிவரி செய்கிறோம். இது நல்ல வழியாக இருக்கிறது.

தேனீ வளர்ப்பு என்பது நிச்சயமாக லாபம் தரும் தொழில்தான். பராமரிக்கவும், தேனை விற்பனை செய்யவும் தெரிந்துகொண்டால் யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் இறங்கி வெற்றி பெறலாம். ஆரம்பத்தில் எனக்கு இருந்ததைப் போல, புதிதாக தேனீ வளர்ப்பில் ஈடுபடும் பலருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அவர்களுக்காகவே மாதத்தில் ஒருமுறை இலவச தேனீ வளர்ப்புப் பயிற்சி நடத்துகிறேன். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வந்து பலனடைகிறார்கள். அவர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கி தேனீ வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்துகிறேன். என்னிடம் வகுப்பிற்கு வந்தவர்களுள் 10 பேர் தீவிரமாக தேனீ வளர்ப்புத் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள்.

தற்போது என்னிடம் 3 டன் தேன் ஸ்டாக் இருக்கிறது. தேனீக்கள் நான் நினைத்ததை விட அதிகமாகவே தேனைச் சேகரித்துத் தருகின்றன. இந்தத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதாவது தேனில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து அதை சந்தையில் விற்பனை செய்ய திட்டம் வைத்திருக்கிறேன். உதாரணமாக தேனில் ஊறவைக்கப்பட்ட நெல்லிக்கனி, தேன் அத்தி, தேன் பேரிச்சை என பல உணவுப் பொருட்களைத் தயாரிக்க திட்டம் வைத்திருக்கிறேன். இது நடைமுறைக்கு வரும்போது இன்னும் கூடுதல் லாபம் பார்க்கலாம்’’ என நம்பிக்கையுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு
இசக்கிமுத்து : 88259 83712

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு