தேனி மாவட்ட கிராமப்புறங்களில் தொற்றாநோய் சிகிச்சை பிரிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

 

 

தேவாரம், ஏப். 24: தேனி மாவட்டத்தில் கூடலூர், கோம்பை, வீரபாண்டி, டொம்புசேரி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 8 இடங்களில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், டி.சிந்தலைசேரி, க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இவை செயல்படுகின்றன. இங்கு டாக்டர்கள், செவிலியர்கள், லேப், உள்ளிட்டவை செயல்படுகின்றன.

வளர்ந்து வரும் மாற்றத்தினால் தற்போது அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பதட்டமான வாழ்க்கை முறையால் இதயநோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்தாலே தொற்றாநோய் பிரிவில் ரத்தம், சிறுநீர், பிரசர், இ.சி.ஜி., எடுக்கப்படுகிறது. நோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால் தொடர் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், கிராமங்கள் சார்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டும் கிராமப்புற நோயாளிகள் தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் டெஸ்ட்டிற்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே செய்தாலும் ஆரம்ப கட்ட சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யும் நிலைமையே உள்ளது. குறிப்பாக நகர்ப்புற அரசுமருத்துவமனைகளில் உள்ளதுபோல் கிராமங்களில் தொற்றாநோய் சிகிச்சை பிரிவு இருந்தும் முடங்கப்பட்டு கிடக்கிறது. இதனால் சர்க்கரை, பிரசர், இதயநோய் பாதிப்பில் உள்ள கிராமப்புற மக்கள் யார் என்றே தெரியாத நிலை உள்ளது.

எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தொற்றாநோய் சிகிச்சை பற்றி விழிப்புணர்வு அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், கிராமங்களில் முன்பு 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொள்ளும் வருமுன் காப்போம் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொள்வர். இதில் சர்க்கரை, இதயநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், டி.பி. உள்ளிட்ட பலநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இம்முகாம்களை மீண்டும் தொடங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து