தேனி மாவட்டத்தில் விளைச்சலை மேம்படுத்த பருத்திக்கான தனிவாரியத்தை உருவாக்க வேண்டும்

*மானிய விலையில் உரம், மருந்து வழங்கவும் கோரிக்கை

தேனி : தேனி மாவட்டத்தில் மீண்டும் பருத்தி விளைச்சலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பருத்தி விவசாயத்திற்கு தேவையான கரிசல்மண், வெப்ப சீதோஷ்ணநிலை, மழைப் பொழிவு ஆகியவை பருத்தி விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் தேனியை சுற்றியுள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தேனியில் பருத்தி விளைச்சல் இருந்த காரணத்தினால் பருத்தி விதைகளை தனியாக பிரித்து, பஞ்சினை தனியாக பிரித்தெடுக்கும் வகையில் 40க்கும் அதிகமான ஜின்னிங் பேக்டரிகள் செயல்பட்டு வந்தன. 16 காட்டன் ஆயில்மில்களும் செயல்பட்டு வந்தன. தேனி மாவட்டத்தில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்து விற்பனை செய்வதெற்கென சுமார் 200க்கும் மேற்பட்ட கமிஷன் கடைகள் தேனி நகர் பழைய பஸ்நிலையத்திற்கு அருகே பெரியகுளம் சாலையில் பருத்தி சந்தை கூடிவந்தது.

இச்சந்தையானது வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூடி வருகிறது. தேனி மாவட்ட விவசாயிகள் எம்யுசி 5 ரக பருத்தியை விளைவித்தனர். இத்தகைய பருத்தி ரகத்தினை ஜவுளி ஆலைகள் விரும்பி வாங்கின. இத்தகைய பருத்தி ரக விதைகள் மூலமாக ஏக்கருக்கு 10 முதல் 14 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்து வந்தது. இந்நிலையில் காலப்போக்கில் எம்யுசி 5 ரகத்திற்கு பதிலாக புதிய ஒட்டுரக விதைகள் அறிமுகமான நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. விளைச்சல் குறைந்து விலையும் குறைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே 2வது அதிக எண்ணிக்கையில் ஜின்னிங் பேக்டரிகள் தேனியில் தான் இயங்கின. ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது. தேனியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கரிசல் மண் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்ற மண் என்பதால் ஒரு குழியில் பருத்தி சாகுபடி செய்தால் ஏறக்குறைய ஏழு குவிண்டாலில் இருந்து 15 குவிண்டால் வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்து வந்தது. இப்போது உற்பத்தி செலவு கூடிவிட்டது. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலையும் கூடிவிட்டன. பருத்திக்கு கிடைக்கும் விலையும் குறைந்து விட்டது. விவசாயிகளுக்கு மிகக் குறைந்த லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மத்தியில் பருத்தி சாகுபடிக்கான முக்கியத்துவம் குறைந்துபோனது.

இதன்காரணமாக மாவட்டத்தில் இருந்த 40 ஜின்னிங் பேக்டரிகள் தற்போது 15 பேக்டரிகளாக குறைந்து போயுள்ளன. இதேபோல காட்டன் ஆயில் மில்களின் எண்ணிக்கையும் குறைந்து போய்விட்டது. கமிஷன் கடைகளின் எண்ணிக்கையும் குறைந்து, இத்தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியிருந்த 300 மாட்டு வண்டிகள், கால்நடைகள், கால்நடைகளை நம்பியிருந்த மாட்டுத் தீவின கடைகளின் எண்ணிக்கை, சுமைதூக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பருத்தியை நம்பியிருந்த் ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தேனி நகரானது வெள்ளைத் தங்கமான பருத்தி விளைச்சலில் பெற்றிருந்த பெருமை நாளடைவில் குறைந்து போயுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கு தேவையான பருத்தி குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஆதாரவிலையை குறைத்த ஒன்றிய அரசு இதுகுறித்து தேனியை சேர்ந்த பருத்தி வியாபாரியான நடேசன் கூறியதாவது: ஒன்றிய அரசு தற்போது பருத்திக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு தவிர பருத்தி விளையும இதர மாநிலங்களில் பருத்திக்கென தனிவாரியம் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அம்மாநில அரசு நேரடியாக விவசாயிகளுக்கு தரமான பருத்தி விதைகளை வழங்குகிறது. பருத்தி விளைச்சலை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பருத்திக்கான தனிவாரியத்தை உருவாக்க வேண்டும், வேளாண்மைத் துறை அதிகாரிகள் பருத்தி தவிர இதர வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

வேளாண்மை அதிகாரிகளை பருத்தி விளைச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும். பருத்திக்கான வாரியம் மூலமாக தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பருத்தி விளைச்சலின்போது எந்த பருவத்திற்கு என்ன உரமிட வேண்டும், என்ன மாதிரியான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்க வேண்டும். விளைச்சலை அதிகப்படுத்த ஊக்கத்தொகை வழங்குவதுடன் மானிய விலையில் உரம், மருந்து விநியோகிக்க வேண்டும்.

பருத்தி கொள்முதலில் டெண்டர் முறையை கடைபிடிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிறுவனமான பருத்தி ஆய்வு மையத்தில் உருவாக்கப்படும் சோதிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு அரசே வழங்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலை கிடைப்பதால் தமிழ்நாடு அரசு பருத்தி சாகுபடியின் பரப்பளவு விரிவாக்கத்திற்கு ஊக்குவித்தால் தேனி மாவட்டம் பருத்தி விளைச்சலில் மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்கும், என்றார்.

வாரத்திற்கு ரூ.2 கோடிக்குள் குறைந்தது

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கு தேவையயான பருத்தியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி மாவட்டத்தில் இருந்துதான் வழங்கப்பட்டு வந்தது.இதனால் தேனி பருத்தி சந்தையானது சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்கதாக உள்ளது. தேனியில் விளைவிக்கப்பட்ட எம்யுசி 5 ரக பருத்திக்கு பதிலாக டிசிஎச் மற்றும் எல்.ஆர்.என பல்வேறு ஒட்டு ரக விதைகள் அறிமுகமானதால் விளைச்சல் பாதிக்கப்பட்டதோடு விளைச்சக்கு ஏற்ற விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டு விட்டது. விவசாயம் செய்த விளைச்சல் மண்ணும் பாதிக்கப்பட்டு விட்டது.

தரமான விதைகள் மூலமாக விளைச்சல் நடந்தபோது தேனி நகர பருத்தி சந்தைக்கு 60 ஆயிரம் மூடைகள் வரை பருத்தி வந்தது. இதன்மூலம் வாரத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை பணப்புழக்கம் இருந்து வந்தது. தற்போது பருத்தி வரத்து குறைந்து போனதால் பணப்புழக்கம் குறைந்து வியாபாரமும் வாரத்திற்கு ரூ.2 கோடிக்குள் குறைந்து போய்விட்டது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!