தேனி மாவட்டத்தில் போலி பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் வாகனங்கள் அதிகரிப்பு

*கட்டுப்படுத்த கடிவாளம் இடுவாரா கலெக்டர்?

கம்பம் : தேனி மாவட்டம் முழுவதும் கார்கள் மற்றும் பைக்குகளில் போலி பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அலுவலக ரீதியாக பயன்படுத்தும் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2012ம் ஆண்டு ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும், இதை அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. காவல்துறை உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிய நிலையில், இன்று வரை தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் ஸ்டிக்கர்களை அப்புறப்படுத்தியதாக தெரியவில்லை.

போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்வோரும், சிறுவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க , மாவட்டத்தில் உள்ள கார்கள், மற்றும் பைக்குகளில் போலியான எக்ஸ்-ஆர்மி, பிரஸ் மற்றும் அட்வகேட் என ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு சிலர் தங்களது உறவினர்கள் அரசு துறையில் வேலை செய்தால் அந்த பதவி பெயரை தங்களது வாகனத்தின் முன்புறம் ஸ்டிக்கர் ஒட்டி செல்கின்றனர். அதிக வேகத்தில் வண்டியை இயக்குதல், மது போதையில் வண்டியை இயக்குதல், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் உண்மையானவர்கள் யார் என்ற குழப்பம் போலீசாருக்கு நிலவுகிறது.

இந்த ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு நபர்கள் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி செல்கின்றனர். . சில நேரங்களில் போலீசார் வாகன சோதனை செய்யும் போது வாகனத்தின் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்க்கும் என்ன சம்மந்தம் என கேட்டால் , உறவினருடைய வண்டி ஓசி வாங்கி ஓட்டிச் செல்கிறேன் என்கின்றனர்.

போலீசார் தங்களது சொந்த வாகனத்தில் போலீஸ் என ஒட்டக்கூடாது என அரசு பல முறை அறிவித்துள்ளது. இருந்தாலும் போலீஸ், பிரஸ், ஆர்மி, எக்ஸ்-ஆர்மி, அட்வகேட் என ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ள வாகனங்கள் மீது உண்மை தன்மையை கண்டறிந்து கலெக்டர், மாவட்ட எஸ்பி போலியான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

போலி நபர்களை கண்டறிய வழி…

தற்பொழுது அதிகளவில் பிரஸ் என்ற ஸ்டிக்கரை வாகனங்களில் காண முடிகிறது. பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனத்தை நிறுத்தி போலீசார் உரிய ஆவணங்களை காட்டச் சொல்லி கேட்பதில்லை என்பதால் அதிகமானோர் பிரஸ் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்டிக்கர் கடைகளில் ரூ.50 கொடுத்தால், பிஆர்ஓ அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் ஊடகம் ஸ்டிக்கர் போலவே அச்சு அசலாக ஸ்டிக்கர் எடுத்து ஒட்டப்படுகிறது.

இதனால், அதிகளவில் போலியான ஸ்டிக்கர்கள் உருவாகி வருகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மக்கள் தொடர்பு அலுவலரிடம் அங்கீகாரம் உள்ள பத்திரிகையாளர்கள் பெயர் பட்டியலுடன் அவர்களது வாகன எண் ஆகியவற்றை இணைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் பெயர் பட்டியில் இருக்க வேண்டும். அப்போதுதான் போலியான நபர்களை கண்டறிய முடியும்.

Related posts

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி திடீர் விலகல்

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை மீண்டும் ராஜினாமா செய்த பாபர் அசாம்