தேனி பை-பாஸ் சாலை அகலப்படுத்தப்படுமா..? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

தேனி: தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள மேட்டை சீரமைத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி நகர் பைபாஸ் ரோட்டில் சுமார் 7.33 ஏக்கர் பரப்பளவில் தேனி புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. தேனி நகரிலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் இப்புதிய பஸ்நிலையத்தில் இருந்தே பஸ்கள் வந்து செல்கின்றன. திண்டுக்கல், கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் இப்புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்கிறது.

திண்டுக்கல், பெரியகுளம் வழித்தடத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும், அன்னஞ்சி பிரிவில் இருந்து பிரியும் பைபாஸ் சாலை வழியாக வருகிறது. தேனி புதிய பஸ் நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர், தேனி-மதுரை செல்லும் சாலையில் இருந்து பைபாஸ் செல்லும் சாலை சுமார் 20 உயர மேட்டின் வழியாக பஸ் ஸ்டாண்டு செல்லும் வகையில் இருந்தது.

20 அடி உயர மேட்டில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் இருக்கும் என்பதால், புதிய பஸ் நிலையம் திறக்கும் முன்பே பஸ் நிலையம் வரை இருந்த சுமார் 20 அடி உயர மேட்டை நெடுஞ்சாலைத் துறை கரைத்து சீரமைத்தது. இதனால், தற்போது பேருந்துகள் புதிய பஸ்நிலையத்திற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்கிறது. ஆனால், தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் வழித்தடத்திற்கு செல்லும்போது, புதிய பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் சாலை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சுமார் 30 அடி உயர மேடாகவும், இறக்கமுமாகவும் உள்ளது. எனவே, இச்சாலையில் வரும் பேருந்துகள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றன. மேலும், சரக்குகளை ஏற்றி வரும் லாரிகளும் இச்சாலையில் சிரமத்துடன் வருகின்றன.

இந்த மேட்டில் வாகனங்கள் அதிகவேகத்தில் மேடான சாலையில் இருந்து இறங்கும்போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. மேலும், அதிகவேகத்துடன் மேடான பகுதியில் இருந்து பஸ் இறங்கும்போது, பஸ் கவிழ்ந்து விடும் அபாயமும் தொடர்ந்து வருகிறது. எனவே, இச்சாலையில் உள்ள மேடான பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தேனி நகரானது வளர்ந்து வரும் பெருநகராக உள்ளது. இப்புதிய பஸ் நிலையத்தை சுற்றியும் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகின்றன. மேலும், பைபாஸ் சாலையில் காலை, மாலை வேலைகளில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற மேடான பகுதிகளில் பயிற்சி மேற்கொள்வது கால் மூட்டுகளுக்கு ஆபத்தானது என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த மேட்டை சீரமைத்து சமதளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்