தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (30.09.2024) சென்னை, தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ரூ. 1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

சென்னை மாவட்டம், தேனாம்பேட்டை, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள 1738 சதுர அடி மனையில் வணிக வளாகம் கட்டப்பட்டு அதில் 9 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அவர்களின் நீதிமன்ற உத்தரவின்படி, உதவி ஆணையர் திரு. பாரதிராஜா அவர்களின் தலைமையில் காவல்துறையினரின் உதவியுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.67 கோடி ஆகும். இந்நிகழ்வின்போது தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வாளர் மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்