சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் 75% நிரம்பியது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 22.10 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 22 அடியை கடக்கும்போது ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்படயுள்ளது.

இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 17.41 அடி நீர் உள்ளது. பூண்டி, சோழவரம் எரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகள் முழு கொள்ளளவில் 75 சதவீதத்திற்கு அதிகமான நீர் நிரம்பியுள்ளன. அதன்படி செம்பரம்பாக்கம் அணை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அணை மற்றும் தேர்வாய் கண்டிகை அணை, செங்குன்றம் அணை ஆகிய அணைகள் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய நீர்தேக்கங்களான 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 43.64 அடி, 105 அடி கொண்ட பவானிசாகர் அணையில் 68.45 அடி, பூண்டியில் 32.53 அடி, சோழவரம் அணையில் 12.19 அடி, புழல் ஏரியில் 17.41 அடி, செம்பரம்பாக்கம் அணையில் 22.10 அடி, வீராணம் ஏரியில் 8.50 அடி, தேர்வாய் கண்டிகை அணையில் 35.63 அடி நீர் உள்ளது. இது வடகிழக்கு பருவமழையின் போதும் மற்ற மாநிலங்களில் நீர் திறக்கப்படும் போது மேலும் அதிகாரிக்கூடும். மேலும் கண்டலேறு நீர்த் தேக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் 17ம் தேதி 5178 மி.க.அடி பெறப்பட்ட நிலையில் இந்தாண்டு அதே தேதியில் 2412 மி.க.அடி நீர் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு