விளையாட்டு தான்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டுமே தவிர மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வரை 500 ரன்களுக்கு மேல் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் என மூன்று பேர் எடுத்து இருந்தனர். கே.எல். ராகுல், சுப்மன் கில் கணிசமான ரன்களை குவித்து இருந்தனர். இதே போல் பந்துவீச்சில் முகமது ஷமி (23 விக்கெட்), பும்ரா (18), முகமது சிராஜ் (13), ரவீந்திர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (15) விக்கெட் எடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

தொடர் வெற்றி, பேட்டிங் மற்றும் பவுலிங் மிரட்டலால் இறுதி போட்டியில் இந்திய வீரர்களுக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களை நடத்திய நாடுகளே வென்றதால் இறுதி போட்டியில் இந்தியா வெல்லும் என கணிப்பும் அதிகரித்தது. கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிலும், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணி இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. இதனால், இறுதி போட்டியில் இந்தியா பழித்தீர்க்கும் என வர்ணனையாளர்கள் கூறினர். அதே நேரத்தில் டேவிட் வார்னர் (528 ரன்), மிட்செல் மார்ஷ் (426 ரன்), டிராவிஸ் ஹெட் (192 ரன்) ஸ்டீவன் சுமித், லபுஸ்சேனிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கிய இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் மோதின. ஆஸ்திரேலியா டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட்டும், மிட்செல் ஸ்டார்க் உள்பட பவுலர்கள் இந்திய ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோரது அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் எளிதில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த 1,30,000 ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கிவிட்டது. இந்தியாவின் தோல்வியை நேரில் காண முடியாத ரசிகர்கள் பாதியிலேயே நடையை கட்டினர். வீட்டில் டிவியை பார்த்தவர்கள் கனத்த இதயத்தோடு நிறுத்திவிட்டு தூங்க முடியாமல் தவித்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத திருப்பதியை சேர்ந்த இளைஞர் ஜோதி குமார் மன வேதனையால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்தியா தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை என பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். விளையாட்டை விளையாட்டாக ரசிக்க வேண்டுமே தவிர அதற்காக அதில் மூழ்கி மனகவலையை ஏற்படுத்தி கொள்ள கூடாது. ஒரு உயிர் போகும் அளவுக்கு மனதை விட்டுவிடக்கூடாது. தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே விளையாட்டு என்றால் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

Related posts

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

திருச்சியில் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை : மேளம் அடித்து சங்கு நாதங்கள் முழக்கம்

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு