நாடு தான் என் குடும்பம் என்று சொல்வதை விட; காடு தான் என் குடும்பம் என்று பிரதமர் மோடி சொன்னால் சரியாக இருக்கும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் கிண்டல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.சம்பத்தின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு, தமிழ்நாடு காங்ங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன எம்எல்ஏ, கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநில பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது, ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி நாடு தான் என் குடும்பம் என்று சொல்வதை விட காடு தான் என் குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் குரங்குகளும், பன்றிகளும், ஓநாய்களும் அவருக்கு உறவினர்களாக இருப்பதற்கு சரியானவர்கள். அடுத்த முறை மோடி தமிழ்நாடு வரும் போதும் தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரஸ் தான் திமுக, திமுக தான் காங்கிரஸ். மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்ட கட்சியாக உள்ளோம்.

வரும் தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார். திமுக கூட்டணியில் இணைந்து 5 முறை காங்கிரஸ் தேர்தலை சந்தித்துள்ளது. காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதிகள் பிரித்தாளப்படுகிறது. காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதேநேரம் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதியை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். திமுகவில் தொகுதிகள் குறைக்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்‌‌.

* அதிமுக தலைவர்கள் படம் போட்டு பிரசாரம்: 3 பாஜ பிரமுகர்கள் நீக்கம்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராகிவரும் பாஜகவும், அதிமுகவும் போட்டா போட்டியுடன் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளது. பாஜவினர் சமூக வலைதளத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அடங்கிய போஸ்டரை போட்டு வாக்கு சேகரித்தனர். பதிலுக்கு அதிமுகவினர் மோடி, ரங்கசாமி படத்தை போட்டு ஓட்டு கேட்டனர். இந்த விவகாரத்தில் பாஜக பிரமுகர்கள் விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகிய 3 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் அதிரடியாக நேற்று உத்தரவிட்டுள்ளார்.

* போதை பொருட்கள் அதிகமாக குஜராத்தில்தான் பிடிபடுகிறது: அதானி துறைமுகத்தில் ரூ.30,000 கோடி போதை மருத்து பறிமுதல்; சிறுபான்மை மக்களுக்கு எதிராக சதியை அரங்கேற்றும் அண்ணாமலை; பீட்டர் அல்போன்ஸ் பகீர்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய தேர்தல் அரசியல் என்பது, பெரும்பான்மை வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காக, சிறுபான்மையின மக்களை எதிரிகளாக கட்டமைக்கும் சதியாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனை முன்னின்று நடத்துபவர் பாஜ தலைவர் அண்ணாமலை. இது தவிர்க்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ததில், அமைச்சருக்கும், காவல்துறை தலைவருக்குமே பங்கு உண்டு என வருமான வரித்துறை எடுத்த ஆவணங்களில் சொல்லப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பதை போலவும், இந்தியாவில் வேறு எங்குமே இல்லை என்பது போலவும் பிரதமர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு நல்லதல்ல. அவருக்கு தேசிய கடமை உள்ளது. இன்றைக்கு அதிகமான போதை பொருட்கள் குஜராத்தில்தான் பிடிபடுகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.30,000 கோடி மதிப்பிலான போதை மருந்து, அதானி துறைமுகத்தில் இருந்து வெளியே வந்தபோது பிடிபட்டது. எங்கள் துறைமுகத்திற்கு வரும் சரக்குகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, சுங்கவரித்துறை தான் அதை பார்க்க வேண்டும், எனக்கூறி அதானி முடித்துக் கொண்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டதாக குஜராத்தில் செய்தி வெளியானது. ஆகவே போதைப் பொருள் வருகின்ற இடமும், தயாரிக்கும் இடமும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை ஒன்றிய அரசு கவனிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து எப்படி வருகிறது, என்பதை அறிந்து அதனை தடுக்கக்கூடிய அதிகாரம் ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* நோட்டாவ முந்தமுடியாதுன்னு பிரதமர் மோடி விரக்தி பேச்சு: பொன்குமார் கடும் தாக்கு
தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் எத்தனை முறை சுற்றி சுற்றி வந்தாலும், எத்தனை வியூகங்கள் வகுத்தாலும், எத்தனை தில்லாலங்கடி வேலைகளைக் கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜவால் நோட்டாவை வெற்றி கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட பிரதமர் மோடி, விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளார். அதன் வெளிப்பாடு தான் சென்னையில் நடந்த கூட்டத்திலும் அதற்கு முன்பு பெருந்துறையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் திமுகவையும், தமிழ்நாட்டு அரசையும் நான்காம் தர நடையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிரதமரால் அதற்கான விளக்கத்தை அளிக்க முடியாது.

காரணம் ஒன்றிய அரசு தமிழ் நாட்டுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அறிவித்த திட்டங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்தலை. முதல்வரின் ஆணித்தரமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கற்ற பாஜவினர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுகிற பணியை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள முதல்வரை, தமிழ்நாட்டு அரசை கொச்சைப்படுத்தி, களங்கப்படுத்த உயர்ந்த பதவியில் உள்ள ஒரு பிரதமர், ஆதாரமற்ற வகையில் நாக்கில் நரம்பில்லாமல், நான்காம் தர பேச்சாளரைப் போன்று மேடைகளில் பேசுவது அவருடைய பொறுப்பிற்கு அழகல்ல. இது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை