கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லையென கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு: சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தேவை என பல முறை தமிழக அரசு கடிதம் வாயிலாக தெரிவித்தும், தங்களிடம் தடுப்பூசி கையிருப்பு இல்லை கூறி ஒன்றிய அரசு மவுனம் காப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனாவை ஒழிக்க ஒன்றிய அரசின் திட்டப்படி, கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களே தயாரித்தன. அதை பொதுமக்களுக்கு பயன்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்புசிகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, இந்த கொரோனா தடுப்பூசிகள், முதலில் முன்களப்பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக போடப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் அதன் பணிகள் வேகமாக நடந்தது. அதிகளவு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ஆர்வமுடன் மக்கள் முன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதனால், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. 2021ம் ஆண்டு தொடங்கிய தொடர்ந்து கொண்டுள்ளது. தமிழகம் கேட்டதை காட்டிலும் மிக குறைவாகவே தடுப்பூசியை ஒன்றிய அரசு கொடுத்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய தடுப்பூசியை தர ஒன்றிய அரசு மறுக்கிறது.

தமிழத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. ஏப்ரல் மாத கணக்குப்படி, கோவிஷீல்டு 9,29,22,340 டோஸ் , கோவாக்சின் 2,18,78,180 டோஸ் மற்றும் கோர்பேவாக்ஸ் 45,50,200 டோஸ் என மொத்தம் 11.93 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இதை வைத்து தமிழக அரசு, 18 வயது முடிந்த 97.47 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 92.47 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளது.

அதேபோல் 12 முதல் 14 வயதில் உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணை 90.39 சதவீதமும், இரண்டாம் தவணை 69.08 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 15 முதல் 18 வயது நபர்களுக்கு முதல் தவணை 78.53 சதவீதமும், இரண்டாம் தவணை 66.47% சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரைலும் சுமார் 17 சதவீத மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறை காரணாமாக சுமார் 21 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 86 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கையிருப்பில் இருந்த அனைத்து தடுப்பூசிகளும் மார்ச் 31ம் தேதியுடன் தீர்ந்து விட்டது. 5,00,000 டோஸ் கோவிஷீல்ட், 50,000 டோஸ் கோவாக்சின் மற்றும் 75,000 டோஸ் கோர்பேவாக்ஸ் வேண்டும் என ஒன்றிய அரசிடம் கடிதம் மூலம் 3 முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு இது வரை எந்த பதிலும் இல்லை. தடுப்பூசி இல்லாத காரணத்தினால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா