கடனை திருப்பிக் கேட்டதால் ஆத்திரம்: நர்சை கொன்று பிரிட்ஜில் அடைத்து வைத்த வாலிபர்

திருப்பதி: கடனை திருப்பிக் கேட்ட நர்சை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்து வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தராபத் மல்கப் பேட்டையை சேர்ந்தவர் அனுராதா (வயது 55). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். ஐதராபாத் மலை பேட்டையை சேர்ந்தவர் சந்திர மவுலி. வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது நர்சு அனுராதாவுடன் அவரது தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய சந்திரமவுலியின் தந்தை நர்சு அனுராதாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்.

இதனையடுத்து அனுராதாவை அவரது வீட்டில் கீழ் தளத்தில் தங்க வைத்தார். சந்திரமவுலி குடும்பத்தினர் நர்சு அனுராதா உடன் சகஜமாக பழகினர். ஆன்லைன் வர்த்தகத்தில் சந்திரமவுலிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அனுராதாவிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார். இந்த நிலையில் அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் அனுராதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று சந்திர மவுலி அனுராதா வீட்டிற்கு சென்றார். சத்தம் கேட்காமல் இருக்க வீட்டில் உள்ள ஜன்னல், கதவுகளை மூடினார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அனுராதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் டைல்ஸ் கட்டர் கருவி மற்றும் கத்தியை கொண்டு அனுராதாவின் உடலில் இருந்து தலையை தனியாக துண்டித்தார். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனங்களை உடல் பாகங்களில் தடவினார். அனைத்து உடல் பாகங்களையும் பிரிட்ஜில் அடைத்தார். மேலும் வெளியே துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஸ்பிரே அடித்து வந்தார். துண்டிக்கப்பட்ட நர்சு தலையை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்றார். திகலகுடா, மூசி ஆற்றின் கரையில் தலையை வீசிவிட்டு வந்தார். நர்சு அனுராதா திடீரென மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடல் பாகங்கள் இருந்த அறைக்கு யாரும் செல்லாதபடி பூட்டு போட்டார். இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆற்றுப்பகுதிக்குச் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் கவரில் தலை இருப்பதை கண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த தலையை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 750 போலீஸ் நிலையங்களில் காணாமல் போய் கண்டுபிடிக்க படாத பெண்களின் விவரங்களை சேகரித்தனர். தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை வைத்து சந்திர மவுலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அனுராதா கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்திர மவுலியை கைது செய்தனர். பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த உடல் பாகங்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான சந்திரமவுலியை ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!