பேச மறுத்ததால் ஆத்திரம் மாணவி கழுத்தை அறுத்த வாலிபர்: பரங்கிமலை அருகே பரபரப்பு

ஆலந்தூர்: பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2வது தெருவை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன். இவரது மகள் அஸ்மிதா (18), அடையாறில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் அஸ்மிதா, நவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நவீன் தொடர்ந்து அஸ்மிதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஸ்மிதா வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நவீன், பரங்கிமலை ஏழுகிணறு பகுதியில் அஸ்மிதாவை வழிமறித்து அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வீடு அருகே உள்ளதால் என்னை அசிங்கபடுத்தாதே போய்விடு என அஸ்மிதா அழுது கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்மிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இதில் படுகாயமடைந்த மாணவி அஸ்மிதா சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து அஸ்மிதாவை மீட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அஸ்மிதாவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நவீன் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து, அதே பகுதியில் சுற்றித்திரிந்த நவீனை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார், அவரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்