தாமரை தலைவர் மவுன்டன் பொன்னாரை புறக்கணித்த கதையின் பின்னணியை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வேட்பாளர் கனவில் மிதந்து வந்த பொன்னாரை ஒரே நிகழ்ச்சியில் காலி செய்த தாமரை கட்சியின் தலைவர் மவுன்டனை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் தாமரை கட்சியின் மாநில தலைவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் போன்று நடந்த அந்த கூட்டத்தில் அடுத்த வேட்பாளர் கனவில் இருக்கும் பொன்னானவரும் மேடையில் இருந்தாராம். அவர்தான் வேட்பாளர் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் நினைத்து கொண்டிருந்தார்களாம். ஆனால், சூசகமாகக்கூட தாமரை தலைவர் பொன்னார் பெயரை சொல்லவே இல்லையாம்.

ஆனால், கூட்டத்தை பற்றி பின்னர் கருத்து தெரிவித்த தாமரை கட்சியின் மாநில தலைவர் மவுன்டன், கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் வரும் மக்களவை தேர்தலில் இங்கு போட்டியிடுகின்ற வேட்பாளர் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனால் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தாமரை தலைவர் ஆசைப்படுகிறாரோ என்ற சந்தேகம் பொன்னார் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் வந்துள்ளதாம். தொகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து போட்டியிடும் பொன்னானவருக்கு போட்டியாக இம்முறை தாமரை தலைவர் மாறிவிடுவார் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு வேகமாக பரவி வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்தில் உள்ள யுனிவர்சிட்டியில என்ன பிரச்னையாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஆட்சியில நடந்த முறைகேடு, ஊழல் தொடர்பாக மாங்கனி மாவட்டத்தில் உள்ள பல்கலையில் விசாரணை நடந்துட்டு வருது. கடந்த வாரம் நடந்த பட்டமளிப்பு விழாவுல கிண்டிக்காரர் சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டாராம். அவரோட பார்வை இருந்தா எந்த விசாரணையில் இருந்தும் தப்பிச்சுக்கலாம்னு யாரோ ஐடியா கொடுக்க, முறைகேடு ஆபிசர்கள் எல்லாம், கிண்டிக்காரர விழுந்து, விழுந்து கவனிச்சாங்களாம். அந்த வகையில கிண்டிக்காரரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பட்டம் பெறும் நபர்கள் கருப்பு நிற உடை அணிய வேண்டாம்னு ஒரு சுற்றறிக்கையே தயாராச்சாம்.

இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு வந்ததால, அந்த உத்தரவை வாபஸ் வாங்கினாங்க. முறைகேடு ஆபிசருங்க தான் ஒட்டு மொத்த விழாவை ஒற்றுமையாக இருந்து நடத்தி இருக்காங்க. இதுல உணவுத்துறைய கவனிச்ச துறை தலைவர் மேல ஏற்கனவே மோசடி புகார் இருக்கு. விழா சமயத்துல தரமில்லா உணவு வழங்கியதா பெற்றோர் சிலர் கேட்க, அதையெல்லாம் கவனிக்க முடியாதுனு காட்டமா பேசியிருக்காரு. அதுதொடர்பா சிலர் அரசுக்கு புகார் கொடுத்து இருக்காங்களாம். அப்படி தெனாவட்டா பேசிய அதிகாரி இப்போது பிரச்னையில இருந்து தப்பிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சஸ்பெண்ட் ராசி பயத்துல விவசாய துறையில் இருந்து ஓட்டமெடுக்கும் அதிகாரிகள் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில விவசாய துறையில் இணை இயக்குனராக பொறுப்பில் நிரந்தர அதிகாரியை நியமித்து 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறதாம். இதனால் வெயிலூர் மாவட்டத்தில விவசாயிகளுக்கான திட்டங்களை தெரிந்து கொள்வதிலும், சிக்கல் ஏற்படுகிறது. அதோடு, கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜோடியாக இருந்த சிங்கமான பெயர் கொண்டவர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த பொறுப்புக்கு வர அதிகாரிகள் பலரும் தயக்கம் காட்டுறாங்களாம்.

தற்போது புதிதாக நியமிக்கப்படுபவர்களும் 3 மாதங்களில் ஓய்வு பெறும் நிலையிலேயே வருவதால், அவர்கள் தங்கள் பணி காலத்தில் எந்த பிரச்னையும் இன்றி ஓய்வுபெற்றால் போதும் என்ற மனநிலையில் இருக்காங்களாம். இதனால் பெரிய அளவிலான ஆய்வுகளை செய்வதில் தயக்கம் காட்டுகிறார்களாம். இதனால வெயிலூர் மாவட்டத்தில வேளாண் துறை வளர்ச்சியே இல்லாமல் நாளுக்கு நாள் தேய்ந்து வருதாம். வேளாண் சார்ந்த பணிகளை முறையாக ஆய்வு செய்யும் வகையிலும், வேளாண் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ஆடி அமாவாசையையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு மல்லிகை ரூ.1800க்கு விற்பனை

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து

சென்னை பல்லவன் இல்லத்தில் 100 புதிய பேருந்துகளை கொடியசத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்