மது அருந்த பணம் தராததால் தலையில் கல்லை போட்டு மாமியாரை கொன்ற மருமகன்


தாம்பரம்: மது அருந்த பணம் தராததால் ஆத்திரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபூஷணம் (60). இவருக்கு கன்னியப்பன், குமார், சுரேஷ் என 3 மகன்களும், சசிகலா என்ற‌ மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா, ராமகிருஷ்ணன் (40) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சசிகலா – ராமகிருஷ்ணன் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், ராமகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் சசிகலா அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். தொடர்ந்து ராமகிருஷ்ணன், தனது 2 மகன்களுடன் மாமியார் சிவபூஷணம் வீட்டிலேயே தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார்.

மதுப்பழக்கத்தால் அவர் வேலைக்கு சரியாக செல்லாமல், மது அருந்த பணம் கேட்டு, அவரது மாமியாருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல மது அருந்த மாமியாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் தராததால் சரமாரி தாக்கி, கீழே தள்ளி, வீட்டின் அருகிலிருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து மாமியாரின் தலையில் போட்டுவிட்டு, அவரது காதில் இருந்த 2 கம்மல்களை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிவபூஷணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, குரோம்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்டம், திருமேனி பகுதியில் நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த ராமகிருஷ்ணனை கைது செய்து நடத்திய விசாரணையில் சிவபூஷணம் தன்னை வீட்டில் சேர்க்காமலும், சரியாக உணவு தராமல் செய்ததால் மதுபோதையில் கல்லால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்