‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையை பாராட்டி அரசு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சிறந்த சமூக சேவகரான ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சமூக சேவையை பாராட்டி அரசு குடியிருப்பு ஒன்றினை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் கல்லூரியில் நூலகராக பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியம், ஓய்வூதியம், குடும்ப சொத்து மற்றும் விருதுகள் மூலம் கிடைத்த அனைத்தையும் தொண்டு பணிக்கே வழங்கியதோடு, ‘பாலம்’ என்ற அமைப்பினை தொடங்கி நீண்ட காலமாக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பணியாற்றி, இந்திய அரசின் பத்ம விருது மற்றும் அமெரிக்காவின் ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்’ விருது பெற்றுள்ளார். சமூக சேவகர் பாலம் பா.கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப்பகுதியில் குடியிருப்பு ஒன்றினை அவருக்கு ஒதுக்கீடு செய்து, பயனாளி பங்கு தொகையினையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையை நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்