ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் நடத்தி மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்ட தாளாளர்

தேனி: தேனியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருடன் ஏற்பட்ட மோதலால் மாணவர்களை வெளியேற்றி பள்ளியை மூடிய தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தேனி நகர் சுப்பன் தெருவில் மஹாராஜா தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. பள்ளியின் மேல்தளத்தில் செவித்திறன் குறைபாடுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதற்கான வாடகையை பள்ளி தாளாளர் அன்பழகன் (55) பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் அன்பழகன், பள்ளி தலைமையாசிரியர் சென்றாயபெருமாளிடம் பயிற்சி மைய நிர்வாகம் கொடுத்த வாடகை பணத்தை கேட்டுள்ளார். இதற்கு தலைமையாசிரியர், அதை மின்சார கட்டணத்திற்கு செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, அன்பழகன் மாணவ, மாணவியரை வெளியேறும்படி கூறி பள்ளியை பூட்டிச் சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையே, தேனி மாவட்ட எஸ்பியிடமும், தேனி நகர் போலீசிலும் தலைமையாசிரியர் சென்றாய பெருமாள் நேற்று புகார் அளித்தார். அதில், ‘‘கடந்த ஜன. 18ம் தேதி பள்ளி தாளாளர் அன்பழகன் என்னையும் சக ஆசிரியை சுமதியையும் பள்ளியை விட்டு வெளியேறும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அன்பழகன் மாணவர்கள் முன்னிலையில் என்னை கடுமையாக அடித்து, சக ஆசிரியை மற்றும் மாணவர்களை வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு போட்டு கொலைமிரட்டல் விடுத்தார்.

எனவே, பள்ளித்தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தேனி போலீசார் பள்ளி தாளாளர் அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த அன்பழகன் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை தேனி பங்களாமேடு அருகே பழைய உதவி தொடக்கக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பள்ளியில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது. இப்பள்ளியிலேயே இம்மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை நடத்த மாவட்ட கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அடிப்படை வசதியில்லாததால் இப்பள்ளியை மூடச் சொல்லி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்