ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 எகிறியது; நெல்லையில் தக்காளி விலை சதம் அடித்தது: வரத்து வெகுவாக குறைந்தது

நெல்லை: ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சைவம், அசைவம் அனைத்து வகை உணவிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கி கடந்த மாதம் வரை விளைச்சல் அதிகமாக இருந்ததால் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. குறிப்பாக கடந்த ஜனவரிக்குப் பின்னர் 4 மாதங்களுக்கு மேலாக மொத்த விற்பனை விலையில் கிலோ 15 ரூபாய் என்ற அளவை தாண்டவில்லை. தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டனர். பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை நிறுத்தி மாற்று காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் ெதாடர் வெயில் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. நெல்லையில் உள்மாவட்ட அளவில் மட்டுமின்றி பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறையத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. நெல்லை காய்கறி விற்பனை சந்தைகளில் நேற்று முன்தினம் கிலோ ரூ.70க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.100 ஆக உயர்ந்தது. இதுபோல் பாளை. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.48ல் இருந்து ரூ.78ஆக உயர்ந்தது. ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்று காலை தக்காளி வாங்க வந்தவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பலர் குறைந்த அளவில் தக்காளி வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. பெங்களூரு, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை போன்ற இடங்களில் இருந்து வழக்கத்தைவிட 50 சதவீத அளவிலேயே தக்காளி வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக வரத்து இல்லை. இதனால் விலை உயர்ந்து வருகிறது. பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் வருவதால் தக்காளிக்கான தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது என்றனர்.

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது