அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்குகிறது: எதிர்கட்சிகளின் வியூகங்களால் ஆளும் பாஜவுக்கு நெருக்கடி

புதுடெல்லி: டெல்லி அவசர சட்டம், மணிப்பூர் வன்முறை, பொது சிவில் சட்டம், ஆளுநர்களின் தலையீடு பிரச்னைகளுக்கு மத்தியில் வரும் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. எதிர்கட்சிகளின் அடுத்தடுத்த வியூகங்களால் ஆளும் பாஜவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த மழைக்கால கூட்டத்தொடர் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரத்தாலும், கடந்தாண்டு மழைக்கால கூட்டத்தொடர் விலைவாசி உயர்வு பிரச்னையாலும் பெரும் பாதிப்படைந்தது. இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதில், நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் முதல் பாதியை முடக்கியது. இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் முழு பட்ஜெட் கூட்டதொடரும் பெரும் பாதிப்பை சந்தித்தது. பல முக்கியமான சட்டங்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன. அவதூறு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி தர திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக டெல்லி அவசர சட்ட விவகாரம், மணிப்பூர் வன்முறை, பொது சிவில் சட்டம், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் பூதாகரமாக உள்ளன. அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், சட்ட ஆணையத்தின் கருத்து கேட்பு நடவடிக்கை, நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு அழைப்புவிடுத்துள்ள ஆலோசனைக் கூட்டம், பிரதமரின் வலியுறுத்தல்கள் எனப் பல நிகழ்வுகளும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே, பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை லட்சக்கணக்கானோரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டு உள்ளது. இதற்கிடையே மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறுமா? இல்லை புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘புதிய நாடாளுமன்றத்தில் வரும் 20ம் தேதி ெதாடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது’ என்று அறிவித்துள்ளார். வரும் சில நாட்களில் பெங்களூருவில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், பொது சிவில் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம், ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம், எதிர்கட்சிகளின் அடுத்தடுத்த வியூகங்களால் ஆளும் பாஜகக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு