தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாதி மோதல்கள், மதக்கலவரங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம்- ஒழுங்கை பொறுத்தமட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலைகள், காய வழக்குகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.
கொலை வழக்குகளில் நீண்ட கால தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 2017-20ம் ஆண்டில் கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019ம் ஆண்டில் 1745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்கு பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024ம் ஆண்டில் மிக குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு வருடத்தையும் விட மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் 2024ம் ஆண்டில் பதிவாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் மிக குறைந்த அளவில் ரவுடி கொலைகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் 2024ம் ஆண்டில் ரவுடிகள் கொலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச்) வரையிலான 3 மாதங்களில் 340 கொலைகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டின் (2024) முதல் காலாண்டில் 352 கொலைகளாக இருந்தது.
கொலைகளுக்கான காரணங்களில் திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்ற பிற வகையான கொலைகளை தடுப்பது கடினம். பல சந்தர்ப்பங்களில் சிறைக்குள் இருந்தபடியே பழிவாங்கும் கொலைகளை செய்ய ரவுடிகளால் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. பழிவாங்கும் மற்றும் ரவுடி தொடர்பான கொலைகளை தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பெறவும் சிறைகளில் உள்ள ரவுடிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ள (391 வழக்குகள்) அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
இதனால் கடந்த 2024ம் ஆண்டில் 242 ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் 150 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமாகும். ஜாமீன் பிணை நிபந்தனைகளை மீறியதால் 68 ரவுடிகளின் ஜாமீன்கள் பிணை ரத்து செய்யப்பட்டன. இது கடந்த 12 ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச ஜாமீன் பிணை ரத்து ஆகும். இதற்கு முன்பு செய்யப்படாத ரவுடிகளுக்கு எதிரான நிதி விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில், நிதி விசாரணையை நடத்துவதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி விசாரணையை நடத்துவதற்காக 41 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏ-பிளஸ், ஏ கேட்டகிரி ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைப்பு
காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் ஏ - பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 421ம், ஏ - கேட்டகிரியில் ரவுடிகளின் எண்ணிக்கை 836ம், பி- கேட்டகிரியில் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை 6,398ம், சி- கேட்டகிரியில் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை 18,807ஆக குறைந்துள்ளது. இதில் ஏ-பிளஸ், ஏ கேட்டகிரி கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைந்துள்ளது.


