காலத்தின் அவசியம்

 

ஆ ன்ட்ராய்டு போன்களின் அசுர பாய்ச்சலால், இப்போது நமது உள்ளங்கையில் உலகம் வந்துள்ளது. அதேநேரத்தில் இந்த உலகத்தின் கவனத்தை எப்படியாவது நம் மீது திருப்பவேண்டும் என்பதும் பலரது எண்ண ஓட்டமாக மாறியுள்ளது. இதற்காக இளைஞர்கள், யுவதிகள் மட்டுமன்றி நடுத்தர வயதினரும் நாட்டம் கொள்ளும் களமாக மாறி நிற்கிறது சமூக வலைதளங்கள். வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று ஒவ்வொருவரும் ஒரு வலையில் சிக்கியுள்ளனர். இவை அனைத்திலும் கணக்கு தொடங்கி, முழுநேரமும் அதில் மூழ்கி கிடப்பவர்களின் எண்ணிக்ைகயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தவகையில் சமூக வலைதளங்களை சமீபகாலமாக அதிகளவில் ஆக்கிரமித்துள்ளது ரீல்ஸ். டிக்டாக் செயலிக்கு தடை என்ற அறிவிப்புக்கு பிறகு, ரீல்ஸ் மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. திரை நட்சத்திரங்களை மிஞ்சும் மிடுக்கான ஸ்டைல், துடிப்பான நடனம், வயிற்றை பதம்பார்க்கும் காமெடி துளிகள் என்று ஆரம்பத்தில் ரீல்கள் நகர்ந்தது. தற்போது இது சாகசங்களின் பதிவிடமாய் மாறிவருகிறது. அசுர வேகத்தில் கார் ஓட்டுவது, ஓடும் ரயிலை நிறுத்தி அதற்கு மேல்நின்று டான்ஸ் ஆடுவது போன்ற அபாயங்களை கடந்து, உயிருக்கே உலைவைக்கும் சம்பவமாக அரங்கேறி வருகிறது.

நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சிவா, அதே பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அப்படி பிடித்த கையோடு, ஒரு ரீல்ஸ் போட வேண்டும் என்ற எண்ணமும் அவரை ஒட்டிக்கொண்டது. இதையடுத்து பாம்பின் வாயோடு தனது வாயை வைத்து கவ்விக்கொண்டு ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது, பாம்பு அவரை கடித்தது கூட தெரியாமல் ரீல்ஸ் எடுப்பதிலேயே அவரது கவனம் இருந்துள்ளது. சில மணித்துளிகளில் வாயில் நுரைதள்ளி மயங்கி சரிந்தார் சிவா. தந்தையின் கண்ணெதிரே அவர் மரணத்தை தழுவிய சோகம், மாநிலம் கடந்து ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இதேபோல், கடந்த ஜூலை மாதம் மகாராஷ்டிராவின் கும்பே அருவிக்கு சென்றார் இளம்பெண் அன்னிகாம்தர். ரீல்ஸ் பதிவிற்காக அருவியின் மேல்பகுதிக்கு சென்றவர் 300 அடிபள்ளத்தில் விழுந்தார். 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, உயிரற்ற அவரது உடல் மீட்கப்பட்டது. 25 வயதுக்குள் நிகழ்ந்த இவர்கள் இருவரது மரணத்திற்கும் காரணம் ரீல்ஸ் மோகம். ரீல்ஸ் மட்டுமல்ல, செல்பி மோகத்திலும் சிக்கிக்கொண்டு பல உயிர்கள் பலியாகி வருகிறது.  சமீபத்தில் சமூக மேம்பாடு சார்ந்த அமைப்புகள் இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. ரீல்ஸ் மற்றும் செல்பி மோகம் 75.5சதவீதம் பேரை தொற்றிக் கொண்டுள்ளது.

இதில் 68 சதவீதம் பேர், 24வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவரவும், கருத்துகளை அறிவதற்கும் மட்டுமே இவை வழிவகுக்கிறது. இதற்கு ஆசைப்பட்டு மட்டுமே, இளைஞர்கள் பலர் ஆபத்தான தளங்களில் பயணித்து, பெரும் அபத்தங்களை சந்தித்து வருகின்றனர் என்பது ஆய்வாளர்களின் குமுறல். மனித பிறப்பு என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்தபிறப்பில் சாதனைகளால் கவனம் ஈர்க்கும் தனித்திறன் என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வருவதற்கான சிந்தனையோடு செயல்பட்டால், மரணத்திற்கு பிறகும் நாம் பேசப்படுவோம்.

அதை தவிர்த்து, இதுபோன்ற வேதனை களங்களில் நிகழ்த்தும் சோதனைகள், நமது மரணத்தை மட்டுமே பேசும். இதை உணர வேண்டியதும், பிறருக்கு உணர்த்த வேண்டியதும் காலத்தின் அவசியம் என்றால் அது மிகையல்ல.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்